

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பெண்களை வேட்டையாடுவது, வளர்ந்துவரும் அச்சுறுத்தல் என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை, ஒரு கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்கும் செய்தி, தமிழகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் பலமாக ஒலித்து வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இந்தச் சம்பவம் குறித்து தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், நடிகர் சித்தார்த் ட்விட்டரில் தன்னுடைய கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
“பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கினால் அதிர்ச்சியாகியுள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன். அப்போதுதான் அவர்களால் முன்வந்து பேசி, குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கை வலுப்படுத்த முடியும். சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பெண்களை வேட்டையாடுவது, வளர்ந்துவரும் அச்சுறுத்தல். அதற்கு எதிராக நாம் பாதுகாப்பு கொடுக்கவேண்டும்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சித்தார்த்.