

என் சினிமா வாழ்க்கையை ஃபாலோ பண்ணாதீர்கள் என்று ஓவியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள படம் '90 எம்.எல்'. மார்ச் 1-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்துக்கு சிம்பு இசையமைத்துள்ளார். படத்துக்கு தணிக்கையில் 'ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது.
'90 எம்.எல்' படத்தின் ட்ரெய்லர், SNEAK PEEK உள்ளிட்டவற்றில் இருக்கும் ஆபாசக் காட்சிகள் மற்றும் வசனத்துக்கு இணையத்தில் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த ரசிகர்களை இப்படத்தின் மூலம் ஓவியா இழந்துவிட்டார் என்று பலரும் தெரிவித்தார்கள்.
இது தொடர்பாக ஓவியா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
'' '90 எம்.எல்' மாதிரியான படங்களின் மூலம் பாலியல் உணர்வு தூண்டப்படுவதில்லை. பல படங்களில் நாயகர்கள் பலரைக் கொலை செய்வது போல காட்சிகள் உள்ளன. பலரையும் அடித்துத் துவைக்கிறார்கள். அதன் மூலம், சமூகத்தின் வன்முறை அதிகமாகிறது என்று சொல்ல முடியுமா?
என் சினிமா வாழ்க்கையை யாருமே ஃபாலோ செய்யாதீர்கள். என் நிஜ வாழ்க்கையில் எப்படியிருக்கிறேன் என்பதை மட்டும் பாருங்கள். சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்க வேண்டும். கவர்ச்சி, ஆபாசம் அனைத்துமே உங்கள் பார்வையில் தான் இருக்கிறது''.
இவ்வாறு ஓவியா தெரிவித்துள்ளார்.