

ராதாரவி பேசியது தவறு என்றும் யுவன் பெயர் நீக்கப்பட்டதன் பின்னணி குறித்தும் 'கொலையுதிர் காலம்' தயாரிப்பாளர் ஆடியோ ஃபைல் ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார்.
சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா, பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கொலையுதிர் காலம்'. இப்படத்தை மதியழகன் தயாரித்துள்ளார். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (மார்ச் 23) நடைபெற்றது.
இவ்விழாவில் படத்தின் இயக்குநரே கலந்து கொள்ளவில்லை. மேலும், இயக்குநர் கரு.பழனியப்பன், ராதாரவி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட சில திரையுலகினர் மட்டுமே கலந்து கொண்டார்கள்.
இந்த விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, இசையமைப்பாளர் யுவன் தனது ட்விட்டர் பக்கத்தில், '' 'கொலையுதிர் காலம்' படத்தின் இசை என்னுடையது அல்ல'' என்று தெரிவித்தார். இது மேலும் சர்ச்சையை உண்டாக்கியது.
ஏனென்றால், 'கொலையுதிர் காலம்' திரைப்படம் முதலில் யுவனின் 'YSR ஃபிலிம்ஸ்' நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டது. இதனை பூஜா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் யுவனின் நிறுவனத்திடம் கொடுத்தது. பின்பு ஏற்பட்ட பிரச்சினையால் மதியழகன் தற்போது தயாரிப்பாளராக இருக்கிறார்.
யுவன் ட்வீட் குறித்து, என்ன பிரச்சினை என்பது குறித்து தயாரிப்பாளர் மதியழகன் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:
''மேடையில் அனைவருமே இருந்தார்கள். ராதாரவி சார் சீனியர் நடிகர். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அந்த இடத்தில் அப்படி பேசியிருக்கக் கூடாது. எனக்கே அதில் உடன்பாடில்லை. பெரிய பிரச்சினையாகி விட்டதால், ராதாரவி சாரிடம் பேசத்தான் முயற்சி செய்து வருகிறேன்.
யுவன் சார் தான் இப்படத்துக்கு முதலில் இசை. யுவன் சாருடைய நிறுவனம் தான் முதல் பிரதி அடிப்படையில் முதலில் தயாரித்தார்கள். இந்தி திரையுலகின் முன்னணி நிறுவனமான பூஜா நிறுவனம் தான் முதல் தயாரிப்பாளர். பூஜா நிறுவனம் - யுவன் நிறுவனம் இரண்டுக்கும் இடையே ஏதோ பிரச்சினை இருக்கிறது. இது எனக்கு தெரியாது.
யுவன் சார் என்னிடம் பேசி, இப்பிரச்சினையைப் பேசி முடித்துக் கொள்கிறோம் என்றார். மேலும், அதுவரை என்னுடைய பெயரை படத்தில் போடாதீர்கள் என்றும் தெரிவித்தார். ஆகையால் மட்டுமே அவருடைய பெயரை நீக்கினோம்.
இதைத்தவிர படத்தில் வேறு எவ்வித பிரச்சினையுமே இல்லை. தற்போது 'கொலையுதிர் காலம்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் படத்தை தணிக்கைக்கு அனுப்ப முடிவு செய்திருக்கிறோம்''.
இவ்வாறு மதியழகன் தெரிவித்துள்ளார்.