

கேப்டன் மார்வெல் போல் சக்தி கிடைத்தால் தீவிரவாத நடவடிக்கைகளை ஒழிப்பேன் என்று நடிகை தமன்னா கூறியுள்ளார்.
மார்வெல் நிறுவனத்தின் அடுத்த சூப்பர் ஹீரோ படமான ’கேப்டன் மார்வெல்’ வரும் மார்ச் 8 (மகளிர் தினம்) அன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
ப்ரீ லார்சன், சாமுவேல் எல் ஜாக்சன் ஆகியோர் நடிக்கும் இப்படத்தை அன்னா போடென், ரையான் ஃப்ளெக் இயக்கியிருக்கிறார்கள். இந்தியாவிலும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.
இப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி நேற்று (01.03.2019) சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகைகள் தமன்னா, சமந்தா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் டிஸ்னி நிறுவனத்தின் இந்தியத் தலைமை அதிகாரி பிக்ரம் துக்கல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய காஜல் அகர்வால், ''நான் மார்வெல் காமிக்ஸ் மற்றும் படங்களின் மிகத் தீவிரமான ரசிகை. தோர் தான் எனக்கு மிகவும் பிடித்த மார்வெல் கதாபாத்திரம்'' என்று கூறினார்.”
தமன்னாவிடம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ”கேப்டன் மார்வெல் போல் உங்களுக்கு சக்தி கிடைத்தால் என்ன செய்வீர்கள், எதை மாற்றுவீர்கள்” எனக் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த தமன்னா, "தூய்மையை மேம்படுத்துவேன். பெண் சிசுக் கொலை, ஊழல் ஆகியவற்றை ஒழிப்பேன். உலக அமைதிக்காக தீவிரவாத நடவடிக்கைகளை ஒழிப்பேன். மக்கள் அனைவரும் அமைதியாக இருக்க, அதை நல்ல வழியில் உபயோகிக்க வேண்டும்" என்றார்.
மேலும், ''சினிமா என்பது பொழுதுபோக்குக்காக மட்டும்தான். யாரையும் திருத்தவோ, நாட்டை திருத்தவோ இல்லை. சினிமாவால் யாரையும் மாற்ற முடியாது" என்று தமன்னா கூறியுள்ளார்.