

ஹன்சிகா நடித்துவரும் ‘மஹா’ படத்துக்காக 7 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார் சிம்பு.
மும்பையைச் சேர்ந்த ஹன்சிகா மோத்வானி, இந்தியில் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்தார். பின்னர், தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானவர், தொடர்ந்து இந்தி, கன்னடத்தில் நடித்தார். தமிழில் தனுஷ் ஜோடியாக ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் அறிமுகமானார்.
விஜய், சூர்யா, கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த ஹன்சிகாவின் 50-வது படம் ‘மஹா’. ‘ரோமியோ ஜூலியட்’ மற்றும் ‘போகன்’ ஆகிய படங்களில் இயக்குநர் லக்ஷ்மணிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜமீல், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
ஹீரோயினை மையப்படுத்திய இந்தக் கதையில், ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, நாசர், கருணாகரன், ஜெயப்பிரகாஷ், சாயா சிங் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்தை, மதியழகன் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், காவி உடை அணிந்து ஹன்சிகா புகை பிடிப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்ததால் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், இந்தப் படத்தில் நடிப்பதற்காக சிம்பு 7 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார்.
சமீபத்தில் ஓவியா நடிப்பில் வெளியான ‘90 எம்எல்’ படத்தில், க்ளைமாக்ஸ் காட்சியில் சிம்பு இடம்பெற்றார். அதேபோல் ‘மஹா’ படத்திலும் சில காட்சிகள் மற்றும் ஒரு பாடலில் சிம்பு இடம்பெறுவார் எனத் தெரிகிறது.
‘வாலு’ படத்தில் ஒன்றாக நடித்த சிம்பு - ஹன்சிகா இருவரும் ஏற்கெனவே காதலித்துப் பிரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.