

ஹைதராபாத்தில் அஜித் - வெங்கட்பிரபு சந்தித்து பேசியுள்ளனர். இது கண்டிப்பாக 'மங்காத்தா 2' படத்துக்கான பேச்சுவார்த்தை தான் என்று இருவருக்கும் நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித், த்ரிஷா, லட்சுமிராய், ப்ரேம்ஜி, அசோக் செல்வன், அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் 2011-ம் ஆண்டு வெளியான படம் 'மங்காத்தா'. அஜித் நடிப்பில் உருவான 50-வது படம் இதுவாகும். பெரும் வசூல் சாதனை புரிந்தது.
இதனைத் தொடர்ந்து அவ்வப் போது, எப்போது மீண்டும் அஜித்துடன் இணைவீர்கள் என்ற கேள்வி இயக்குநர் வெங்கட்பிரபுவைத் துரத்திக் கொண்டே இருந்தது. அவரும் 'விரைவில் நடக்கும்' என்ற பதிலை மட்டுமே கொடுத்து வந்தார்.
இந்நிலையில், 'பிங்க்' ரீமேக்கைத் தொடர்ந்து போனி கபூர் தயாரிக்கவுள்ள அடுத்த படத்திலும் அஜித் நடிக்கவுள்ளார். இதன் இயக்குநர் யார் என்பது குறித்து பல்வேறு செய்திகள் வெளியான வண்ணமுள்ளன.
மேலும், ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் 'பிங்க்' ரீமேக் படப்பிடிப்பு தளத்தில் அஜித்தை சந்தித்து பேசியுள்ளார் இயக்குநர் வெங்கட்பிரபு. இப்பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து 'மங்காத்தா 2' படத்துக்காக என்ற யூகங்களும் கிளம்பியது.
இது தொடர்பாக வெங்கட்பிரபுவுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்த போது, "’மாநாடு’ படத்தைத் தொடர்ந்து அஜித்தை படத்தை இயக்கவே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 'மங்காத்தா 2' படத்துக்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், அனைத்துமே முதற்கட்ட பேச்சுவார்த்தையில் தான் உள்ளது. ஆகவே, இப்போதே எதையும் உறுதிப்படுத்த முடியாது" என்று தெரிவித்தார்கள்.
அஜித் - வெங்கட்பிரபு மீண்டும் இணையும் செய்தி, அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சந்தோஷத்தை உருவாக்கியுள்ளது.