

தன்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கார்த்திக்கின் 'கப்பல்' படத்தை தனது எஸ்.பிக்சர்ஸ் நிறுவனம் மூலமாக வெளியிடுகிறார் இயக்குநர் ஷங்கர்.
வைபவ், சோனம் பாஜ்வா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'கப்பல்' படத்தை இயக்கியிருக்கிறார் கார்த்திக். இவர் இயக்குநர் ஷங்கரிடம் 'சிவாஜி' மற்றும் 'எந்திரன்' ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறார்.
தன்னுடைய குருநாதருக்கு 'கப்பல்' படத்தை திரையிட்டு காட்டியுள்ளார் கார்த்திக். இரண்டு நாட்கள் கழித்து கார்த்திக்கிற்கு போன் செய்த ஷங்கர், தனது எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மூலமாக 'கப்பல்' படத்தை வெளியிடுகிறேன் என்று கூறியிருக்கிறார்.
இதுகுறித்து இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் கூறும்போது, ‘‘முழுக்க காமெடி பயணம் இது. வைபவ், சோனம் பஜ்வா, கருணாகரன் உள்ளிட்ட பலர் காமெடி கலாட்டா செய்து நடித்துள்ளனர். பட வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு ஷங்கர் சார் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு படத்தை அவரிடம் போட்டுக் காட்டினேன். மிகவும் ரசித்துப் பார்த்தவர், படத்தை ‘எஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் வாங்கி வெளியிடுவதாகவும் சொன்னார்’’ என்கிறார் உற்சாகமாக.