

‘எல்கேஜி’ படத்தின் வெற்றியால் மகிழ்ந்த தயாரிப்பாளர், இயக்குநருக்கு கார் பரிசளித்துள்ளார்.
ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படம் ‘எல்கேஜி’. ஆர்ஜே பாலாஜியே கதை, வசனம் எழுதிய இந்தப் படத்தை, கே.ஆர்.பிரபு இயக்கினார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்த இந்தப் படத்தை, சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளியிட்டது.
சாதாரண வார்டு கவுன்சிலரான லால்குடி கருப்பையா காந்தி (ஆர்ஜே பாலாஜி), எப்படி எம்எல்ஏ தேர்தலில் வெற்றிபெற்று தமிழக முதல்வராகிறார் என்பதுதான் படத்தின் கதை. இதில், ஆர்ஜே பாலாஜி ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.
நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், மயில்சாமி, ராம்குமார், மனோபாலா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விது அய்யண்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 22-ம் தேதி வெளியான இந்தப் படம், இரண்டாவது வாரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. 15 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், படத்தின் இயக்குநருக்கு புதிய கார் ஒன்றைப் பரிசளித்தார். மேலும், உதவி இயக்குநர்களையும் கவுரப்படுத்தினார்.
ஆர்ஜே பாலாஜி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘பூமராங்’, வருகிற வெள்ளிக்கிழமை (மார்ச் 8) ரிலீஸாகிறது. அதர்வா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார்.