

'கத்தி' படத்தை இணையத்தில் பிரபலப்படுத்த செல்ஃபி (SELFIE) மேனியா உத்தியை கையில் எடுத்திருக்கிறது படக்குழு.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 'கத்தி' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் விஜய் பாடியிருக்கும் பாடல் சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்தப் வரிகளுக்காக தற்போது இணையத்தில் மிகவும் பிரபலமான 'செல்ஃபி'யை கையில் எடுத்திருக்கிறார்கள்.
இந்தப் பாடலை இயற்றியுள்ள மதன் கார்க்கி "'Lets take a Selfie Pulla' பாடல் மூலமாக 'கொலவெறி'யும், 'கூகுள் கூகுளும்' சந்தித்திருக்கிறார்கள்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
இது குறித்து அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, "விஜய் சார் பாடினார். #Selfiepulla விரைவில்" என்று தகவல் சொல்லியிருக்கிறார்.
இப்பாடலின் மூலமாக இணையத்தில் 'கத்தி' படத்தைப் பிரபலப்படுத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது.
இது குறித்து அனிருத் மேலும் கூறும்போது, "'கத்தி' போஸ்டர் பின்னணியில் நண்பர்கள் குழுவோடு அல்லது தனியாகவோ செல்ஃபி எடுத்து #KaththiSelfie என்ற போட்டியில் கலந்துகொள்ளுங்கள். அதில் தேர்ந்தெடுக்கப்படும் சிலருக்கு ஆச்சர்ய பரிசுகள் காத்திருக்கிறது" என்று வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.
விஜய், சமந்தா, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட மொத்த படக்குழுவும் இந்த #KaththiSelfie என்ற டேக்கில் Selife புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு, படத்தை பிரபலப்படுத்த முடிவு செய்திருப்பதும் கவனிக்கத்தக்கது.