செல்ஃபி விஷயம் வைரலுக்காகச் செய்தது: நடிகை கஸ்தூரி

செல்ஃபி விஷயம் வைரலுக்காகச் செய்தது: நடிகை கஸ்தூரி
Updated on
1 min read

செல்ஃபி விஷயம், விழா வைரலாக வேண்டும் என்பதற்காகச் செய்தது என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் நடிகை கஸ்தூரி.

கே.சி.சுந்தரம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஜூலை காற்றில்’. அனந்த் நாக் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சம்யுக்தா மேனன் மற்றும் அஞ்சு குரியன் இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். காவியா என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று (மார்ச் 4) நடைபெற்றது. இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் மற்றும் நடிகர் கார்த்தி இருவரும் கலந்து கொண்டனர். விழாவைத் தொகுத்து வழங்கிய நடிகை கஸ்தூரி, ‘வாங்க நாம ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம். உங்க அப்பா இங்க இல்லை’ என்றார்.

இதனால் கோபமான கார்த்தி, “இது தேவையில்லாத விஷயம். செல்ஃபி என்ற விஷயத்துக்கு மரியாதையே இல்லாமல் போய்விட்டது. அனுமதி கேட்டு புகைப்படம் எடுப்பதே கிடையாது. முகத்துக்கு முன்னால் கேமராவைக் கொண்டுவந்து நிறுத்துகின்றனர். முன்னால் ஒரு ஃப்ளாஷ். பின்னால் ஒரு ஃப்ளாஷ் அடித்தால், ஒற்றைத்தலைவலி உள்ளவன் என்ன ஆவான்? விவஸ்தையே கிடையாது என நினைக்கிறேன்” என்று கொஞ்சம் கடுமையாகப் பேசினார்.

இந்த விஷயம், சமூக வலைதளங்களில் விவாதமானது. கார்த்திக்கு ஆதரவாகவும், கஸ்தூரிக்கு ஆதரவாகவும் பலர் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.

இந்நிலையில், ‘இது வைரலுக்காகச் செய்த விஷயம்’ என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் கஸ்தூரி.

“ஜூலை காற்றில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏதாவது வைரல் விஷயம் வேண்டும் என்று செய்தது. ஒர்க் அவுட் ஆயிடுச்சு. இதை நம்பி கொந்தளிக்கிற எமோஷனல் ஆட்கள், கண்டிப்பா ‘ஜூலை காற்றில்’ படத்தை என்ஜாய் பண்ணுவீங்க. இதுதான் நிஜமான புகைப்படம்” என ட்விட்டரில் தெரிவித்துள்ள கஸ்தூரி, கார்த்தி மற்றும் கே.எஸ்.ரவிகுமாருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in