

ஆதி நடித்துள்ள ‘நட்பே துணை’ படம், ஏப்ரல் 4-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் இயக்குநராகவும் ஹீரோவாகவும் அறிமுகமான ஆதி, ஹீரோவாக நடித்துள்ள இரண்டாவது படம் ‘நட்பே துணை’. பார்த்திபன் தேசிங்கு இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சுந்தர்.சி - குஷ்புவின் அவ்னி மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
ஆதி ஜோடியாக அனகா நடிக்க, கரு.பழனியப்பன், ஆர்ஜே விக்னேஷ்காந்த், பாண்டியராஜன், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஆதியே இசையமைத்துள்ளார்.
ஹாக்கி விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், காமெடிக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 15-ம் தேதி பூஜையுடன் தொடங்கிய இதன் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து, ஏப்ரல் 4-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், படத்துக்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். ஆதியின் முந்தைய படமான ‘மீசைய முறுக்கு’ படமும் ‘யு’ சான்றிதழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.