

'அருவி' திரைப்படத்தின் இயக்குநர் அருண் பிரபு இயக்கும் 'யாழ்' படத்தில் 90 வயது நடிகரான எஸ்.என்.பட் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
'காற்றின் மொழி', 'மதராசபட்டினம்', 'திருமணம் என்னும் நிக்கா' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் எஸ்.என் பட். தற்போது 'யாழ்' படத்தில் நடித்து வருகிறார். தனியாக பங்களாவில் வசிக்கும் ஒரு முதியவர், வெளியுலகிலிருந்து யாரும் தன் உலகுக்குள் நுழையாமல் பார்த்துக் கொள்கிறார். ஒரு நாள், ஒரு ஜோடி அவரது பங்களாவுக்குள் நுழைகிறது. இது அந்த முதியவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது.இதுதான் 'யாழ்' படத்தின் கதை.
எஸ்.என்.பட், 1982-ம் ஆண்டு வெளியான 'மூன்றாம் பிறை' படத்தில் மருத்துவர் வேடத்தில் நடித்துள்ளார். பல விளம்பரங்களிலும் தோன்றியுள்ளார். 90 வயதில் நடித்து வந்தாலும், தொடர் படப்பிடிப்புகள் மற்றும் பயணங்கள் ஆகியவை தனது ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது என்கிறார் பட்.
பார்க்க, பிரபல இயக்குநர் கே.விஸ்வநாத்தைப் போல் இருப்பது தனக்கு பெரிய சாதகம் எனச் சொல்லும் பட், இந்த வயதிலும் தனது கனவு நனவாக வாய்ப்பு கிடைப்பது பெரிய அதிர்ஷ்டம் என்றும், சாகும் வரை இந்தக் கலையில் தொடர் வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறுகிறார்.