

’உனக்கு அந்த நடிகரைப் பிடிக்குமா? எனக்கு இந்த நடிகரைத்தான் பிடிக்கும்’ என்றெல்லாம் கச்சைகட்டிப் பிரிந்து கிடப்பார்கள் ரசிகர்கள். ஆனால், சில நடிகர்களை எல்லோருக்கும் பிடிக்கும். எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும். பிரகாஷ் ராஜ்... அப்படியானவர். எல்லா ரசிகர்களும் கொண்டாடும் கலைஞர்.
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரால் அறிமுகமான நடிகர், நடிகைகளின் பட்டியல் மிகப்பெரியது. அந்தப் பட்டியலில் பிரகாஷ் ராஜும் ஒருவர்.
1994-ம் ஆண்டு, கே.பாலசந்தர் இயக்கிய ‘டூயட்’ படத்தில் அறிமுகமானார் பிரகாஷ் ராஜ். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார், கைதட்டல்களைப் பெற்றார். அவரின் நடையில், பேச்சில், சிரிப்பில், முறைப்பில், அலட்சியத்தில், ஆணவத்தில்... எவரொருவரின் சாயலும் இல்லாமல் இருந்ததே அத்தனை பேரையும் ஈர்த்ததற்குக் காரணம்.
அதையடுத்து வஸந்த் இயக்கத்தில், அஜித் நடித்த ‘ஆசை’ படத்தில், மனைவியின் தங்கை சுவலட்சுமி மீது ஆசைப்படுகிற, அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எது செய்யவும் தயங்காத ராணுவ அதிகாரியின் கேரக்டரில் மிரட்டியிருந்தார் பிரகாஷ் ராஜ்.
அதேபோல், பார்த்திபன், தேவயானியுடன் ‘சொர்ணமுகி’ படத்தில் நடித்து அசத்தினார். பொறுப்பான தந்தையாகவும், வெறுப்பைப் பரிசாகப் பெறுகிற வில்லனாகவும் ஒரே சமயத்தில் இப்படியும் அப்படியுமாக நடித்த பிரகாஷ் ராஜை, ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினார்கள்.
இதனிடையே சொந்தப் படம் எடுக்கத் தொடங்கினார். அவர் எடுத்த அத்தனைப் படங்களும் முத்துக்கள்தான் என்று இன்றைக்கும் பாராட்டிக் கொண்டிருக்கிறது திரையுலகம். வணிக ரீதியாக சிந்திக்காமல், உளவியல் பார்வையில், உணர்வுபூர்வமாக இவர் எடுத்த படமெல்லாம் பார்ப்பவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தின.
ஒரு படத்தில் ஹீரோ, அடுத்த படத்தில் கம்பீரமான போலீஸ் ஆபீசர், வேறொரு படத்தில் வில்லன், இன்னொரு படத்தில் காமெடி கலந்த கதாபாத்திரம் என ஆல்ரவுண்டிலும் அதகளம் பண்ணியதும், பண்ணிக் கொண்டிருப்பதும்தான் பிரகாஷ் ராஜ் ஸ்டைல்.
‘கில்லி’யில் த்ரிஷாவைத் துரத்தித் துரத்தி ‘லவ்யூடா செல்லம்’ என்று சொன்ன அதே பிரகாஷ் ராஜ், ‘அபியும் நானும்’ படத்தில், த்ரிஷாவுக்கு அப்பாவாக நடித்திருப்பார். ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் மகளை கொடூரமான முறையில் பறிகொடுத்துத் தவிக்கும் போலீஸ் ரிட்டையர்டு பிரகாஷ் ராஜ், ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில், சிரித்துக்கொண்டே, காமெடி செய்துகொண்டே ஹீரோவுக்கு வில்லனாகியிருப்பார்.
இப்படி அவர் எடுத்துக்கொண்ட எந்தப் படத்திலும், அவரின் கேரக்டருக்கு ஒரு கலர் கொடுத்திருப்பார். கனம் சேர்த்திருப்பார். தனி முத்திரையில் ஜொலிப்பார். பல மொழிகளில் நடித்து, சென்ற மாநிலங்களில் எல்லாம் தனித்துவ நடிகர் எனப் பெயர் வாங்கிய பெருமைக்கு உரிய மகா கலைஞன் பிரகாஷ் ராஜ்.
இயக்குநர் ராதாமோகனுக்கும், பிரகாஷ் ராஜுக்கும் அப்படியொரு கெமிஸ்ட்ரி உண்டு. அவரின் படங்களில், பிரகாஷ் ராஜ் கேரக்டர் அவ்வளவு அழகாக, நடிப்பதற்கான ஆடுகளமாக அமைக்கப்பட்டிருக்கும். ’அழகிய தீயே’ தொடங்கி, ’மொழி’, ‘60 வயது மாநிறம்’ வரை சிக்ஸர் அடித்துக்கொண்டே இருப்பார் நடிப்பால்!
’இருவர்’, ‘காஞ்சிவரம்’ ‘சொக்கத்தங்கம்’, ‘அந்தப்புரம்’ என்று பிரகாஷ் ராஜ் பின்னிப்பெடலெடுத்ததெல்லாம் தனிக்கதை.
நல்ல சினிமா மீதான காதலும் ஏக்கமும் கொண்ட பிரகாஷ் ராஜுக்கு, இன்று (மார்ச் 26) பிறந்த நாள்.
‘ஹாய் செல்லம்... ஹேப்பி பர்த் டே செல்லம்!’