

பொள்ளாச்சி சம்பவத்தை அரசியல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தாதீர்கள் என்று காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.
பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை, ஒரு கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்கும் செய்தி, தமிழகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் பலமாக ஒலித்து வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இந்தச் சம்பவம் குறித்து தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக காயத்ரி ரகுராம் காட்டமாக பதிவிட்டுள்ளார். அவர் பாஜகவில் பணியாற்றி வருகிறார். அதிமுக மீது குற்றச்சாட்டு இருப்பதால், அரசியல் பிரச்சாரத்துக்கு பொள்ளாச்சி சம்பவத்தை பயன்படுத்தக் கூடாது என்று காட்டமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.
இது தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில் காயத்ரி ரகுராம் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி சம்பவத்தில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வன்புணர்வு செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளி எந்த அரசியல் பின்னணியைச் சேர்ந்தவராய் இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும். பாலியல் குற்றங்கள் அரசியல் அல்ல. இது மிகவும் உணர்வுப்பூர்வமான பிரச்சினை.
இதை அரசியல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தாதீர்கள். இது தனிநபரின் குற்றம். அந்த நபருக்கு உட்சபட்ச தண்டனை கொடுங்கள். குற்றத்தை ஆதரித்தவர்களையும் தண்டியுங்கள். சைக்கோ போல சிந்திக்கும் ஆண்களால் தான் பாலியல் குற்றங்கள் நடக்கிறது. எந்த பணக்கார வீட்டு பையனோ, அரசியல் பின்னணி இருப்பவனோ, குடிகாரனோ, ஏழையோ, யாருக்கும் இந்த குற்றத்திலிருந்து மன்னிப்பு இருக்கக் கூடாது.
எந்த சாக்கும் சொல்லப்படக்கூடாது. இது ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும். தண்டனை இரண்டு மடங்கு அளிக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகளின் பெயரைப் பயன்படுத்தியோ, வேறெந்த வழியிலும் அவர்கள் தப்பித்து விடக்கூடாது. பொறுத்தது போதும். காங்கிரஸ், திமுக, அதிமுக, பாஜக என எல்லா ஆட்சியிலும் நீண்ட காலமாக பாலியல் குற்றங்கள் நடந்து வருகிறன.
எந்த அரசியல் கட்சி என்பதல்ல. ஜெயலலிதா அவரகள் ஆட்சியில் சட்டம் மிகவும் கண்டிப்பாக இருந்தது என்பதுதான் உண்மை. ஏனென்றால் அவர் ஒரு பெண். பெண்மை எப்போதுமே மதிப்பு வாய்ந்தது. ஆண்கள் பதவி, பணம், காதல், ஆதரவு என எதை வைத்தும் பொய் சொல்லி அப்பாவிப் பெண்களை ஏமாற்றலாம். இந்த சம்பவத்தில் நிறைய அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிடக் கூடாது.
இவ்வாறு காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.