

ரவி மட்டும் போதும்; ராதா என்பது ஒரு பெண்ணின் பெயரல்லவா? என்று ராதாரவி குறித்து விஷால் கடும் காட்டமாக தெரிவித்துள்ளார்.
'கொலையுதிர் காலம்' பத்திரிகையாளர் சந்திப்பில், நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய பேச்சு மிகவும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ் திரையுலகினர் பலரும் தங்களுடைய கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
ராதாரவியின் பேச்சு பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு திமுக நாளிதழான 'முரசொலி'யில் இடம்பெற்றுள்ளது. மேலும், திமுக தலைவர் ஸ்டாலினும் ராதாரவியின் பேச்சுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இந்தச் சர்ச்சைத் தொடர்பாக நடிகர் சங்கம் என்ன செய்யப் போகிறது என்று விஷாலின் ட்விட்டர் கணக்கை மேற்கொளிட்டு பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். இந்நிலையில், இது தொடர்பாக விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
அன்புள்ள ராதாரவி சார். ஆம், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்ற வகையில் உங்களுக்கு எதிரான இந்த கண்டனக் கடிதத்தில் கையெழுத்திட்டு இருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். அண்மையில் நீங்கள் வெளிப்படுத்திய முட்டாள்தனமான பேச்சு அதுவும் பெண்களை மையப்படுத்தி நீங்கள் பேசியதை கண்டிக்கிறேன். வளருங்கள் சார். இனிமேல் உங்களை நீங்கள் ரவி என்று மட்டுமே அழைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ராதா என்பது ஒரு பெண்ணின் பெயரல்லவா?
இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.