Last Updated : 27 Mar, 2019 02:09 PM

 

Published : 27 Mar 2019 02:09 PM
Last Updated : 27 Mar 2019 02:09 PM

‘இன்று போய் நாளை வா’ - அப்பவே அப்படி கதை: ’ரஹ தாத்தா’வுக்கு 38 வயது

எத்தனை முறை பார்த்தாலும், ஒவ்வொரு முறையும் சிரிப்பு இரட்டிப்பாகிக் கொண்டே போகும் என்பதற்கு உதாரணமாக சில படங்களே இருக்கின்றன. அப்படியான படங்களில் ‘இன்று போய் நாளை வா’ திரைப்படமும் ஒன்று.

வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகள் இல்லாமல், கதையின் போக்கிலேயே காமெடி செய்திருப்பதுதான் படத்தின் முதல் பலம். அதேபோல், வசன ஜாலங்களோ, இரட்டை அர்த்தங்களோ இல்லாமல், நேரடியான வார்த்தைகளில் கலாய்த்திருப்பது அடுத்த பலம்.

மூன்று நண்பர்கள். எதிர்வீட்டுக்கு குடிவந்த பெண். இவர்களுக்குள் நடக்கிற காதல் கண்ணாமூச்சிதான் படத்தின் ஒன்லைன். மூன்று நண்பர்களும் சேர்ந்து ஏரியா வாரியாகச் சென்று, பெண்களை ‘சைட்’ அடிப்பதுதான் பொழுதுபோக்கு. மூவரில் ஒருவர், பணக்காரர். கல்லூரி மாணவர். இன்னொருவர் ஏழ்மையானவர். வேலைக்குச் செல்பவர். அடுத்தவர், நடுத்தர வர்க்கம். வேலைக்குச் செல்லாமல் பொழுதைக் கழிப்பவர்.

பணக்கார ராஜேந்திரன், ஏழை வெங்கட், நடுத்தர வர்க்க பழனிச்சாமி. இவர்களின் நட்பும், பெண்கள் குறித்தான இவர்களின் புரிதலும், வயதுக்கே உரிய குறும்புகளும் என ஜாலியாகத் தொடங்கும் படம், பிறகு ஏதோ சீரியஸ் ரேஞ்சுக்கு மாறிவிடும் என்றெல்லாம் எண்ணிவிடாதீர்கள். படம் முழுவதும் ஜாலி ரவுசுதான்.

பழனிச்சாமியின் வீட்டுக்கு எதிரில் ஒரு குடும்பம் புதிதாகக் குடிவருகிறது. அதில், ஒரு பெண்ணும் இருக்கிறாள். பெயர் ஜெயா. அவர்தான் நாயகி. அவரைக் காதலிக்க மூவருமே ஆசைப்படுகிறார்கள். அதனால் மூவரும் மூன்று திசைக்கெனப் பிரிகிறார்கள். பெண்ணின் அப்பா, இந்தி பண்டிட். எனவே, இந்தி கற்க வருகிறார் ராஜேந்திரன். பெண்ணின் தாத்தா குஸ்தி பயில்வான். எனவே, அவரிடம் சண்டை பயில வருகிறார் வெங்கட். எதிர்வீட்டு பழனிச்சாமி, பெண்ணின் அம்மாவிடமும், பெண்ணின் தங்கச்சி பாப்பாவிடமும் ஒட்டிக்கொள்கிறார்.

அந்தக் குடும்பத்தின் உறவுக்காரப் பெண் ஊரிலிருந்து வருகிறார். மூவரையும் பார்க்கிறார். படிப்புக்காக வந்தவர் அடிவாங்குவதையும், சண்டை கற்க வந்தவர் மொத்துப்படுவதையும், வீட்டு வேலைகளைச் செய்பவர் வாங்குகிற திட்டுகளையும் கவனிக்கிறார். இவர்களின் நோக்கம் வேறு எனப் புரிந்துகொள்கிறார்.

அதேபோல், ஜெயகாந்தனின் கதையைச் சொல்லி, லவ் லெட்டர் தருகிறார் வெங்கட். விழாவுக்கு வரச்சொல்லி, எந்த இந்தியைக் கற்க வந்தாரோ, அந்த இந்தியைக் கொண்டே பாட்டுப்பாடி, அதன்மூலம் காதலைச் சொல்கிறார் ராஜேந்திரன். குடுகுடுப்பைக்காரனுக்கு காசு கொடுத்து, அவன் வழியே ‘இவனே மாப்பிள்ளை’ என்று கருப்புச் சட்டை, வெள்ளை பேண்ட் அடையாளம் சொல்கிறார் பழனிச்சாமி.

இவர்களில் யாரைத் தேர்வு செய்வது என குழம்பிப் போகிறார் ஜெயா. ‘நீங்க மூணு பேரும் மன்னிச்சிருங்க. சினிமா பாத்துட்டு வரும்போது, என்னை ஒருத்தர் கெடுத்துட்டாரு’ என்று சொல்ல, அதிர்ந்து போகிறார்கள் மூவரும். அடிப்பதையே கொண்டிருந்த இந்தி பண்டிட்டை வெளுத்தெடுக்கிறார் ராஜேந்திரன். குஸ்தி வாத்தியாரைப் பின்னிப் பெடலெடுக்கிறார் வெங்கட். ஆனால் பழனிச்சாமியோ... சிகரெட்டாய்க் குடித்துத் தள்ளுகிறார். சிகரெட் துண்டுகளில், ‘ஜெயா’ என்று எழுதிப் புலம்புகிறார்.

இந்த சமயத்தில், அமெரிக்கா செல்லும் டாக்டர் பற்றி பேப்பரில் செய்திவர, அந்தப் புகைப்படத்தைக் கொடுத்து, இவர்தான் என்னைக் கெடுத்தவர் என்று பழனிச்சாமியிடம் ஜெயா சொல்ல, ஏரியா ரவுடி கொஞ்சம் அவர் சாயலில் இருக்க, அவரிடம் அடியும் உதையும் வாங்கினாலும், ரவுடியிடம் எல்லாவற்றையும் விளக்குகிறார் பழனிச்சாமி. ’ஆமாம் என்று சொல்லி பெண்ணை அரேபியாவில் விற்றுவிடலாம்’ என்று கூட்டாளிகள் ஐடியா கொடுக்க, அங்கே... பழனிச்சாமியைக் காதலிப்பதை ஜெயா உணர்ந்துகொள்கிறார். காதலைச் சொல்ல நினைக்கும் வேளையில், ரவுடியிடம் ஜெயாவை ஒப்படைக்கிறார் பழனிச்சாமி. அப்போது காதல் தெரியவர, ஜெயாவைத் தூக்கிக்கொண்டு அவர்கள் கிளம்ப, நண்பர்கள் மூவரும் சேர, ஜெயாவை ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றி, கைப்பற்றி, இருவரும் இணைகிறார்கள். சுபம் கார்டு போடப்படுகிறது.

இந்தக் கதைக்குத் தெளிவான திரைக்கதை அமைத்து, இரண்டரை மணி நேரமும் சிரிக்கவைப்பதே பிரதானம் என ஸ்கிரிப்ட் செய்திருக்கிறார் நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ். ‘சுவரில்லாத சித்திரங்கள்’, ‘ஒருகை ஓசை’, ‘மெளன கீதங்கள்’ நான்காவதாக ‘இன்று போய் நாளை வா’. இந்தப் படத்தின் மூலமாக, முதன்முறையாக இளையராஜாவுடன் இணைந்தார். ராதிகாதான் நாயகி. நண்பர்களாக பழனிச்சாமி, ராம்லி. ராதிகாவின் அப்பா வி.எம்.ஜான். அம்மா காந்திமதி. தாத்தா கல்லாபெட்டி சிங்காரம். ரவுடியாக சூர்யகாந்த். உடன் கைத்தடியாக செந்தில். அவ்வளவுதான் கதாபாத்திரங்கள்.

’ரேஷன் கடையை நான் காட்றேன்’ என்று ராதிகாவை அழைத்துக்கொண்டு செல்வதற்கு கல்லாபெட்டி சிங்காரம் முட்டுக்கட்டை போடுவது, ரேஷன் அரிசியை அப்பா பார்க்கிறார் என குப்பைத்தொட்டியில் மறைத்து வைப்பது, குழந்தை நலனுக்காக கழுதையைப் பிடித்து வருவது என பாக்யராஜின் அக்மார்க் காமெடிக்குப் பஞ்சமே இல்லை. வீட்டுக்கு வரும் இந்தி பண்டிட்டை நாய் விட்டு ஏவுவது, பாட்டி கொஞ்சல், லட்டு அதக்கிக்கொண்டே பாடம் படிப்பது, ’ஏக் காவ் மே ஏ கிஸான் ரஹ தாத்தா’ என்று சொல்ல, ‘ரகு தாத்தா’ என்று இவர் சொல்ல, ‘ரஹ தாத்தா... ஹ... ஹ...’ என்று இந்தி பண்டிட் சொல்ல... தியேட்டரே தெறித்துச் சிரித்தது. இன்றைக்கு வரை, இந்த வசனம் செம ஹிட்டு.

அயர்ன்காரரிடம் கடன் வாங்கிய பணத்துக்குப் பதிலாக ஒற்றைக் கொலுசைக் கொடுப்பார் பாக்யராஜ். பிறகு ‘ஒரு நிமிஷம் கொடு. அந்தப் பொண்ணுகிட்ட நல்ல பேர் வாங்கிட்டு வந்து கொடுத்துடுறேன்’ என்று சொல்லிவிட்டு, ராதிகாவிடம் செல்வார் பாக்யராஜ். ‘இந்தக் கொலுசு உங்க தங்கச்சியோடதா? இல்லேன்னா போய் போலீஸ் ஸ்டேஷன்ல குடுத்துடுறேன்’ என்பார். அவர் பார்த்துவிட்டு, ‘ஆமாங்க, என் தங்கச்சியோடது’ என்று சொல்ல, இடிந்து விடுவார் பாக்யராஜ்.

கருப்புச் சட்டை, வெள்ளை பேண்ட் என்பதை வெள்ளை பேண்ட், கருப்புச்சட்டை என்று மாற்றிவிட்டதாக நினைத்து குடுகுடுப்பைக்காரனை வெளுத்தெடுப்பார், காமெடியிலும்!

‘ஏங்க, அரேபியாவுக்கு எப்படிங்க போகணும்?’ என்று கேட்க, ‘எந்த அரேபியா? சவுத்தா, நார்த்தா?’ என்று ஒருவர் கேட்க, ‘ஏதோ ஒண்ணு. பக்கத்துல இருக்கறதா சொல்லுங்க’ என்று சொல்ல, முட்டாள் வில்லன்களை சிரிக்கச் சிரிக்கக் காட்டியிருப்பார் பாக்யராஜ். அதற்கு, மிரட்டலான வில்லன்களுக்கு உண்டான பின்னணி இசையைப் பண்ணியிருப்பார் இளையராஜா.

’அம்மாடி சின்னப்பாப்பா’, ‘மதனமோக ரூப சுந்தரி, ‘பலநாள் ஆசை திருநாள் ஆச்சு’, ‘மேரே பியாரே’ என்று ஒவ்வொரு பாடலுமே ஒவ்வொரு விதம். எல்லாவற்றிலும் காமெடி ரகம்.

அப்பா பெயர், தாத்தா பெயர், வேலை என்று சொல்லியும் தெரியாத நிலையில், பெண்ணின் பெயரைச் சொன்னதும் மொத்த ஜாதகத்தையும் சொல்லி, வீட்டுக்கு ரூட் சொல்வதையும், பசங்க சேர்ந்து சைட் அடிக்கச் செல்வதையும், அங்கே போடுகிற டிராமாக்களையும் அப்படியே அச்சு அசலாக எண்பதுகளின் வாழ்வியலைப் பதித்திருப்பார் பாக்யராஜ்.

படம்... காமெடிப் படம். சொல்லப்போனால், இயல்பாகவே நகைச்சுவைக்குப் பெயர்பெற்ற பாக்யராஜ் எடுத்த முழுமுதல் காமெடிப்படம். ஆனால் அச்சுப்பிச்சு காமெடி இல்லை. லாஜிக் மீறிய காமெடி இல்லை. டபுள் மீனிங் கிடையாது. ஒரு ஒன்லைனை வைத்துக்கொண்டு, அதற்குள் ‘ஒன்டர்புஃல்’ ஸ்கிரிப்ட்டைக் கலந்து, காட்சிக்குக் காட்சி சிக்ஸர் அடித்திருப்பார் இயக்குநர் பாக்யராஜ்.

அதனால்தான், படத்தை இன்று பார்த்துவிட்டு, மீண்டும் நாளைக்கும் வந்து பார்த்தார்கள் ரசிகர்கள். ரிப்பீட் ஆடியன்ஸ் வருகையால், ஹவுஸ்ஃபுல் போர்டு மாட்டப்பட்டது. கல்லா கட்டப்பட்டது. நூறு நாள் தாண்டி ஓடியது.

1981-ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ம் தேதி ‘இன்று போய் நாளை வா’ ரிலீஸானது. அதாவது, 38 வருடங்களாகிவிட்டன. இந்த நாள்தான் படம் ரிலீஸான நாள். பாக்யராஜின் படங்களில், ஒவ்வொரு படமும் ஒவ்வொரு முத்திரையுடன் இருக்கும். இதுவொரு முத்திரை. காதல், காமெடி, கலாட்டா முத்திரை.

‘இன்று போய் நாளை வா’ மொத்த டீமிற்கும் ஸ்பெஷல் கைகுலுக்கல்கள். இயக்குநர் கே.பாக்யராஜின் எடைக்கு எடை சூப்பர் பொக்கே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x