

ஷங்கர் இயக்கிவரும் 'ஐ' படத்தின் டீஸரை இணையத்தில் 'லீக்' செய்தவர் மீது தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை என்னிடம் அவர் உறுதி செய்தார்.
விக்ரம், ஏமி ஜாக்சன், உபன் பட்டேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'ஐ'. இப்படத்தின் இறுதிகட்டமாக ஒரு பாடல் படப்பிடிப்பு மட்டும் விரைவில் துவங்க இருக்கிறது.
இம்மாதம் 'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இசை வெளியீட்டு விழாவில், அர்னால்ட் கலந்துகொள்ள இருக்கிறார்.
இந்நிலையில், ஆஸ்கர் அலுவலகத்தில் தயாரிப்பாளார் ரவிச்சந்திரன் அறையில் இருந்து 'ஐ' டீஸரை, டிவிடி ப்ளேயர் மூலம் அவரது டி.வி.யிலேயே ஒளிபரப்பி, அதனை மொபைல் கேமராவில் வீடியோ எடுத்து யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளனர். இணையத்தில் 'ஐ' டீஸர் லீக் ஆனது குறித்து அதிர்ச்சியில் இருக்கிறது படக்குழு.
இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனை தொடர்புகொண்டு கேட்டபோது, "விரைவில் பிறக்க இருந்த குழந்தையை, குறைப்பிரசவத்தில் வயிற்றில் இருந்து வெளியே எடுத்துவிட்டார்கள். யார் என்று கண்டுபிடித்து விட்டோம். வெளியிட்டவர் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறேன்.
எனக்கு ஒரு விதத்தில் இது தேவைதான். ஏனென்றால், இத்தனை கோடி போட்டு படம் எடுத்துவிட்டு, நான் கொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டும். இந்த டீஸர் வெளியீட்டால், என்னை ஒன்றும் செய்துவிட முடியாது.
என்னுடைய அலுவலகத்தில் டீ வாங்கிக் கொடுக்கும் பையன் மூலமாகத்தான், அலுவலகத்திற்குள் புகுந்து இருக்கிறார்கள். மொபைலில் எடுத்ததால், டீஸர் முடிந்தவுடன் அவர்கள் பேசியருப்பது பதிவாகி இருந்தது. அதன் மூலமாகத்தான் யார் என்று கண்டுபிடித்தோம்.
இம்மாதம் 15 ஆம் தேதி நடைபெற இருக்கும் இசை வெளியீட்டு விழா, யாருமே எதிர்பார்க்காத வகையில் பிரம்மாண்டமாக இருக்கும். அர்னால்ட் மட்டுமன்றி வேறு சிலரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். விரைவில் யார் எல்லாம் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்பதை முறைப்படி அறிவிக்கிறேன்" என்று கூறினார்.