

‘மீ டூ’ சர்ச்சை குறித்து ட்விட்டரில் சின்மயி கேட்ட கேள்விக்குப் பதில் அளித்துள்ளார் ராதிகா சரத்குமார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘மீ டூ’ சர்ச்சை இந்தியா முழுவதும் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. சினிமாத்துறை உள்பட பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும் இதில் சிக்கினர். அதன்பின்னர் இதுகுறித்த விழிப்புணர்வு அதிகமானது.
இந்நிலையில், ராதிகா சரத்குமாரின் புகழ்பெற்ற சீரியலான ‘வாணி ராணி’ சீரியலில் ‘மீ டூ’ இயக்கத்தைத் தவறாகச் சித்தரித்திருப்பதாக ட்விட்டரில் ராதிகாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார் சின்மயி.
“மதிப்பிற்குரிய மேம், இந்தத் துறையில் வெற்றிபெற நீங்கள் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறீர்கள். ஒரு பெண்ணாக, அதிகாரத்தில் இருக்கும் ஆண்கள் எப்படி பெண்களைக் கொடுமைப்படுத்தி பாடுபடுத்துவார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால், ஏன் ‘வாணி ராணி’ தொடரில் ‘மீ டூ’ இயக்கத்தை பிளாக்மெயில் செய்யும் செயலாக சித்தரித்திருந்தீர்கள்?” என்று கேள்வி எழுப்பிய சின்மயி, சம்பந்தப்பட்ட எபிசோடின் யூ ட்யூப் லிங்கையும் இணைத்துள்ளார்.
1711 எபிசோடான இது, கடந்த வருடம் அக்டோபர் 31-ம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பாகியிருக்கிறது.
சின்மயி கேள்விக்குப் பதிலளித்துள்ள ராதிகா சரத்குமார், “நான் இந்தத் துறையில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறேன், எல்லோரது உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்திருக்கிறேன். அதிலும் பெண்கள் உரிமை என்றால் தவறாமல் முன் நிற்பேன். இது துறையிலுள்ள அனைவருக்கும் தெரியும். நீங்கள் சொன்ன தொடரின் கதையில் உங்களுக்குத் தெளிவு வேண்டுமென்றால், என்னை அலுவலகத்தில் வந்து சந்தியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.