

விஜய் நடிக்கும் ‘தளபதி 63’ படத்தில், பாலிவுட் நடிகரான ஜாக்கி ஷெராஃப் நடிப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் - அட்லீ கூட்டணி இணைந்துள்ளது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
இதில், விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் விளையாட்டுப் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய். இதற்கு ஏற்ற வகையில் தன்னுடைய உடலமைப்பையும் மாற்றியுள்ளார் விஜய். கடந்த ஜனவரி மாதம் முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி, நடைபெற்று வருகிறது.
இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. வருகிற தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில், நடிகை ரெபா மோனிகா ஜான் இந்தப் படத்தில் நடிப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. ‘ஜருகண்டி’ படத்தில் ஜெய் ஜோடியாக நடித்த இவர், பெண்கள் கால்பந்து அணி வீராங்கனைகளில் ஒருவராக இந்தப் படத்தில் நடிக்கிறார் எனத் தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகரான ஜாக்கி ஷெராஃப் ‘தளபதி 63’ படத்தில் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ‘ஆரண்ய காண்டம்’, ‘மாயவன்’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ள ஜாக்கி ஷெராஃப், தற்போது கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ‘பாண்டி முனி’, விக்ரம்பிரபு நடிக்கும் ‘வால்டர்’ ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.