சினிமாவுக்காக இவ்வளவு உண்மையாக இருக்க முடியுமா? என்ற பிரமிப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியவர் விஜய் குமார்: சூர்யா புகழாரம்

சினிமாவுக்காக இவ்வளவு உண்மையாக இருக்க முடியுமா? என்ற பிரமிப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியவர் விஜய் குமார்: சூர்யா புகழாரம்
Updated on
1 min read

சினிமாவுக்காக இவ்வளவு உண்மையாக இருக்க முடியுமா? என்ற பிரமிப்பையும் ஆச்சரியத்தையும் என ‘உறியடி 2’ படத்தின் இயக்குநர் விஜய் குமாரைப் புகழ்ந்துள்ளார் நடிகர் சூர்யா.

விஜய் குமார் இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள படம் ‘உறியடி 2’. சூர்யாவின் 2டி என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இதன் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா இன்று (மார்ச் 23) நடைபெற்றது.

அதில் பேசிய சூர்யா, “இயக்குநர் விஜய் குமார், என்னைப் போலவே அவரும் ஒரு இன்ட்ரோவெர்ட் (introvert). மனதில் நினைத்ததை ‘டக்’கென்று வெளிப்படுத்த மாட்டார். விவாதிக்க மாட்டார். அனைத்தையும் புரிந்து கொள்வார். ஒரு அறிமுகத்திற்குப் பிறகு இயக்குநர் விஜய் குமாரின் ‘உறியடி’யைப் பார்த்தேன். அதன்பின்னர், முதல் சந்திப்பிலேயே நான் எப்படி ராஜா சாருடன் பழகுகிறேனோ, அதேபோல் விஜய் குமாரிடமும் பழகினேன்.

ஒருவர் சினிமாவுக்காக இவ்வளவு உண்மையாக இருக்க முடியுமா? என்ற பிரமிப்பையும் ஆச்சரியத்தையும் என்னுள் ஏற்படுத்தினார். ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு, அதனுள் எவ்வளவு தூரம் உண்மையாகப் பயணிக்க முடியும் என்பதையறிந்து, அந்தளவிற்குப் பயணித்து அதை வெளிக்கொணர்பவர் விஜய் குமார். அவர் சினிமாவுக்காக குடும்பத்தை விட்டுப் பிரிந்து, குழந்தைகளை விட்டுப் பிரிந்து, அவ்வளவு நேர்மையாக இருக்கும் ஒருவரை நான் விஜய் குமாரிடம்தான் பார்த்தேன்.

என் அப்பா படப்பிடிப்பு தளத்துக்கு வந்ததில்லை. எனக்காக யாரிடமும் வாய்ப்பு கேட்டதும் கிடையாது. ஒரு இயக்குநரைக்கூட சந்தித்தது கிடையாது. கதை கேட்டது கிடையாது. தயாரிப்பாளரை சந்தித்தது கிடையாது. இருந்தாலும், ‘நடிகரின் மகன்’ என்ற அடையாளம் எனக்கு இருக்கிறது. ஆனால், எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் ‘உறியடி’ என்ற படத்தை எடுத்து விஜய் குமார் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதை நான் பாராட்டுகிறேன்.

திரையில் ஒரு ஒரு உண்மை வெளிப்பட்டது. அதன் ஆயுள் அதிகம். ‘உறியடி 2’ ஏன் வரவில்லை? என்ற வினா எழுந்தது. ‘உறியடி’ வெளியாகி நான்கைந்து வருடங்களுக்குப் பிறகு, 2டி நிறுவனத்தின் மூலமாக அது உருவானதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் என்டெர்டெயின் பண்ணாது. டிஸ்டர்ப் பண்ணும். யோசிக்க வைக்கும். எப்போதும் போல் நியாயமான தீர்ப்பை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in