‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ஏப்ரலில் ரிலீஸ்: தயாரிப்பாளர் மதன்

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ஏப்ரலில் ரிலீஸ்: தயாரிப்பாளர் மதன்
Updated on
1 min read

எல்லாம் நல்லபடியாக நடந்தால், ஏப்ரலில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸாகும் என தயாரிப்பாளர் மதன் தெரிவித்துள்ளார்.

கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், ஹீரோயினாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய இந்தப் படம், சில பிரச்சினகளால் பாதியில் நின்றது.

பின்னர், விக்ரமை வைத்து ‘துருவ நட்சத்திரம்’ படத்தைத் தொடங்கினார் கெளதம் மேனன். அதுவும் பாதியிலேயே நிற்க, மறுபடியும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’வைக் கையில் எடுத்தார். முக்கியக் கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிக்க, மீதியுள்ள படப்பிடிப்பு முடிவடைந்தது.

படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிந்து, படத்தைத் தணிக்கைக்கு அனுப்பினார் கெளதம் மேனன். படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு உறுப்பினர்கள், யு/ஏ சான்றிதழ் அளித்தனர். எனவே, படத்தை ரிலீஸ் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், இந்தப் படத்தைத் தயாரித்துள்ள எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் ஏற்கெனவே வைத்துள்ள கடன் பாக்கிகள், ‘அச்சம் என்பது மடமையடா’ படத்துக்காக கெளதம் மேனன் வாங்கிய கடன் என எல்லாமே ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ மீது வைக்கப்பட்டுள்ளன.

எனவே, விநியோகஸ்தர்கள் சங்கத்தில் பைனான்சியர்களுடனான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தயாரிப்பாளர் மதன் ஒரு ட்வீட் செய்துள்ளார்.

அதில், “ ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ட்ரெய்லர் ரெடி. படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. எல்லாம் நல்லபடியாக நடந்தால், ஏப்ரலில் படம் ரிலீஸாகும்” எனத் தெரிவித்துள்ளார் மதன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in