

அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் படம் வண்ணமயமான, கொண்டாட்டமான படமாக இருக்கும் என விஜய் தெரிவித்துள்ளார்.
அட்லீ இயக்கத்தில் 'தெறி', 'மெர்சல்' படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறை விஜய் நாயகனாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
சென்னையில் இருக்கும் வெற்றி திரையரங்க உரிமையாளர் ராகேஷ், சமீபத்தில் நடிகர் விஜய்யை தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் ராகேஷ்.
இப்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் படம் பற்றி ராகேஷ் விஜய்யிடம் கேட்டுள்ளார்.
அதற்கு விஜய், "வண்ணமயமான, கொண்டாட்டமான படமாக இருக்கும். எல்லோருக்கும் இந்தப் படம் பிடிக்கும். கடைசி சில படங்கள் கொஞ்சம் சீரியஸா போயிருச்சுல்ல. படத்துல இந்த மீடியா முன்னாடி பேசறது எனக்கே போர் அடிச்சிடுச்சு" என்று பதிலளித்துள்ளார்.
ஆனால் ராகேஷ் இந்த ட்வீட்டைப் பகிர்ந்த கொஞ்ச நேரத்திலேயே நீக்கிவிட்டார். படக்குழு அவரை அணுகி நீக்கச் சொல்லியிருக்கலாம் என்று தெரிகிறது. இருந்தாலும் அவரது ட்வீட் பலரால் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப்பட்டு, விஜய் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.