

மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் நிவேதா பெத்துராஜ்.
பிரபுதேவாவுடன் 'பொன் மாணிக்கவேல்', வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'பார்ட்டி' மற்றும் விஷ்ணு விஷாலுடன் 'ஜகஜால கில்லாடி' ஆகிய படங்களில் நடித்துள்ளார் நிவேதா பெத்துராஜ். இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் எடுத்த புகைப்படங்கள் இப்போது சர்ச்சையாகியுள்ளது.
சர்ச்சைக்கான காரணம், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் கைபேசிக்கு அனுமதியில்லை. எப்போதுமே செருப்புகளை விடும் இடத்திலேயே, கைபேசியைக் கொடுத்து டோக்கன் வாங்கிவிட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும். இதிலிருந்து காவல்துறையினருக்கு மட்டுமே முதலில் விலக்கு அளிக்கப்பட்டது. தற்போது இந்த நடைமுறையில் இருந்து பத்திரிகையாளர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டது.
ஆனால், நிவேதா பெத்துராஜ் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று, அங்குள்ள தெப்பகுளம் உள்ளிட்ட இடங்களில் புகைப்படம் எடுத்துள்ளார். இப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
எப்படி விதிமுறைகளை மீறி புகைப்படங்கள் எடுக்கலாம், கோயிலுக்குள் கைபேசி எப்படி எடுத்துச் சென்றீர்கள் என்று பலரும் நிவேதா பெத்துராஜை கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து புகைப்படங்களை நீக்கிவிட்டார்.
பல்வேறு பேட்டிகளில் தான் மதுரைக்காரப் பெண் என்று பேட்டி கொடுத்தவர் நிவேதா பெத்துராஜ். அவரே இந்த விதிமுறையை மீறியதால் சர்ச்சை உருவாகியுள்ளது.