

'பூமராங்' தலைப்பின் பின்னணி குறித்து அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அதர்வா பேசினார்.
மசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்கியுள்ள படம் 'பூமராங்'. அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் மார்ச் 8-ம் தேதி வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.
இதனை முன்னிட்டு சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு. அதில் நாயகன் அதர்வா பேசியதாவது:
'பூமராங்' ஆரம்பித்ததும் தெரியவில்லை, முடித்ததும் தெரியவில்லை. அந்தளவுக்கு சீக்கிரமாக பண்ணின படம். அதற்கு இயக்குநர் கண்ணன் சாருக்கு நன்றி. என்னிடம் என்ன சொன்னாரோ, அதை திரையில் பார்க்கும் போது சந்தோஷமாக இருந்தது. சரியாக திட்டமிட்டு பண்ணியிருந்தார். 'அர்ஜுன் ரெட்டி' இசையமைப்பாளர் ரதன் சார் தான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். அவர் இன்னும் நிறைய படங்கள் பண்ணவேண்டும்.
'பூமராங்' என்பது எங்கு தூக்கி வீசனாலும், அது நம்மிடமே திரும்ப வரும். இப்படத்தின் டேக் லைன் கர்மா. நம்ம என்ன பண்றோமோ, அது தான் மறுபடியும் நம்மை வந்து சேரும். அது தான் இப்படத்தின் கான்செப்ட்.
விவசாயிகள் பிரச்சினைத் தான் படம் என்றார்கள். ஆனால், அதைத் தாண்டி இப்படத்தில் நிறைய இருப்பதாக கருதுகிறேன். முதல் முறையாக இப்படத்தில் முகமாற்று காட்சிகள் உள்ளது. அது கண்டிப்பாக புதிய விஷயமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
எந்தவொரு கருத்தையுமே வேண்டுமென்று திணிக்கவில்லை. இளைஞர்களாக எங்களுடைய கருத்தை சொல்லியிருக்கோம். கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். 'பூமராங்' படப்பிடிப்பு தளத்தில் இந்தமாதிரி ஒரு படம் பண்ணுங்கள் நல்லாயிருக்கும் என்று ஆர்.ஜே.பாலாஜியிடம் சொன்னேன். உண்மையில் அதொரு படமாக வந்து வெற்றி பெற்றிருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
இந்துஜா, மேகா ஆகாஷ் இரண்டு பேருக்குமே நல்ல எதிர்காலம் உண்டு. தமிழ் பேசும் நாயகிகள் தமிழ் சினிமாவுக்கு நிச்சயம் தேவை.
இவ்வாறு அதர்வா பேசினார்