

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தைப் பார்த்துப் பாராட்டியுள்ளார் பாலிவுட் இயக்குநரான அனுராக் கஷ்யப்.
‘ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தியாகராஜன் குமாரராஜாவே இந்தப் படத்தைத் தயாரிக்க, ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சஷிகாந்த் வெளியிடுகிறார்.
ஃபஹத் ஃபாசில், இயக்குநர் மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், சமந்தா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வருகிற 29-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகிறது.
இந்நிலையில், ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை இந்தித் திரையுலகின் முன்னணி இயக்குநரான அனுராக் கஷ்யப்புக்குத் திரையிட்டு காட்டியுள்ளனர். அதனைப் பார்த்துவிட்டு, “ ‘சூப்பர் டீலக்ஸ்’ பார்த்தேன். அசந்துவிட்டேன். கொண்டாட நிறைய இருக்கிறது. படத்தைப் பார்த்த பிறகு, இந்தப் படத்தில் பங்கு கொள்ளாதது குறித்த எனது வருத்தம் பல மடங்கு அதிகரித்துவிட்டது.
குமாரராஜா, ஒரு துணிச்சலான, எந்தத் தயக்கமும் இல்லாத இயக்குநர். அவரிடம் நிறைய வித்தைகள் உள்ளன. என்னால் நிறைய சொல்ல முடியாது. ஆனால், நீங்கள் இப்படி ஒரு படத்தை எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அனுராக் கஷ்யப்.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாகவும், மிஷ்கின் பூசாரியாகவும், ரம்யா கிருஷ்ணன் ஆபாசப்பட நடிகையாகவும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.