

’வசந்தமாளிகை’ படத்தில் சிவாஜி நடித்த போது அவருக்கு 45 வயது என்றால் நம்புவீர்களா?’ என்று சித்ரா லட்சுமணன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
சிவாஜிகணேசன், வாணிஸ்ரீ நடித்த ‘வசந்தமாளிகை’ திரைப்படம் டிஜிட்டலாக்கப்பட்டு விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் கலந்துகொண்டு பேசியதாவது:
தமிழ்த்திரைப்படம் தொடங்கி நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இதுவரை ஒரேயொரு சிவாஜிதான் நமக்குக் கிடைத்திருக்கிறார். சிவாஜி அளவுக்கு அப்படியொரு மகத்தான நடிகர் இனிமேலும் நமக்குக் கிடைப்பாரா என்பது சந்தேகம்தான்.
அந்தக் காலத்திலேயே திரையிடப்பட்ட 271 காட்சிகளும் ஹவுஸ்புல்லாக ஓடியது ‘வசந்தமாளிகை’ திரைப்படம். எல்லா நடிகர்களும் நடிப்பார்கள். ஆனால் சிவாஜி ஒருவர்தான், கூடு விட்டு கூடு பாய்கிற மாதிரி, அந்தக் கேரக்டராகவே மாறியிருப்பார்.
‘வசந்தமாளிகை’ படத்தின் டிரெய்லர் பார்க்கும் போது, ஏதோ புதிய படத்தைப் பார்ப்பது போல் இருந்தது. அதிலும் சிவாஜியின் ஆட்டமென்ன, ஸ்டைல் என்ன. அதையெல்லாம் செய்வதற்கு எந்த நடிகராலும் முடியாது.
‘வசந்த மாளிகை’ படம் பண்ணும்போது சிவாஜிக்கு வயது 45 என்றால் நம்பமுடிகிறதா? ஒருபடத்தில் கதாநாயகனும் கதாநாயகியும் சேரவேண்டுமே என்று ரசிகர்கள் ஏங்கவேண்டும். அப்படி ஏங்கினால்தான் படம் வெற்றிபெறும். சிவாஜி இந்தப் படத்தில் காதல்ரசம் சொட்டச் சொட்ட நடித்திருப்பார்.
இன்றைக்கு நடிக்க வருபவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். பயிற்சி எடுப்பதெல்லாம் இருக்கட்டும். சிவாஜியின் பத்துப் படங்களைப் பாருங்கள். எப்படி நடிக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரிந்துவிடும். அவருடைய வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள். எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு, நேர்மையாகவும் ஈடுபாட்டுடனும் இருந்து ஒருவர் ஜெயித்தார் என்பது தெரிந்துவிடும்.
இவ்வாறு சித்ரா லட்சுமணன் பேசினார்.