Published : 31 Mar 2019 05:44 AM
Last Updated : 31 Mar 2019 05:44 AM

திரை விமர்சனம் - சூப்பர் டீலக்ஸ்

மனத் தளர்ச்சி அடைந்த முன்னாள் காத லரை வீட்டுக்கு அழைக்கிறார் திருமண மான வேம்பு (சமந்தா). அந்த சந்திப்பில் இருவருக்கும் இடையே உறவு நிகழ்கிறது. அடுத்த கணம் இறந்துவிடுகிறார் காதலர். அதிர்ச்சியில் உறைகிறார் வேம்பு. அந்த நேரத்தில் வீட்டுக்கு வருகிறார் அவருடைய கணவர் முகில் (ஃபகத் பாசில்).

வளரிளம் பருவத்து நான்கு நண்பர்கள் பள்ளிக்குச் செல்லாமல் நண்பனுடைய வீட்டில் ‘ஒரு மாதிரியான படம்’ பார்க்கத் திட்டமிடுகிறார் கள். படம் தொடங்குகிறது. அதில் நடித்திருக் கும் நடிகை, நண்பர்களில் ஒருவனான சூர்யாவின் தாய் லீலா (ரம்யா கிருஷ்ணன்)! அதிர்ச்சியடைந்த சூர்யா, தாயைக் கொல்ல விரைகிறான்.

7 ஆண்டுகளுக்கு முன்பாக ஓடிப் போன ஜோதியின் (காயத்ரி) கணவர் மாணிக்கம் (விஜய்சேதுபதி) திரும்பி வருகிறார் என்கிற தகவலால் உற் சாகமடைகிறான் அவர்களுடைய 7 வயது மகன் ராசுக்குட்டி(அஸ் வந்த்). வீடே மாணிக்கத்தின் வரவுக்காகக் காத்திருக்கிறது. மாணிக்கம், ஷில்பா எனும் திருநங்கையாக வந்து சேர்கிறார்.

சுனாமி அலையில் சிக்கி, கையில் தட்டுப்பட்ட சிலை ஒன்றைப் பிடித்ததால் உயிர் பிழைத்தவர் தனசேகரன் (மிஸ்கின்). அதன் பின்னர் அற்புதம் என்ற பெயருடன் கடவுளின் ஊழியர் ஆகிறார். சுனாமி ஆண்டவரின் வல்லமையால் நோய்வாய்ப்பட்ட மனிதர் களுக்கு தன்னால் சுகமளிக்க முடியும் என நம்புகிறார்.

அவருடைய மகன் வயிற்றில் ஸ்குரூ டிரைவர் குத்தி உயிருக்குப் போராடுவ தாகத் தகவல் வருகிறது. அவர், தன்னைக் காப்பாற்றிய கடவுள், அற்புதம் நிகழ்த்தி மகனையும் காப்பாற்றுவார் என நம்ப, அவரது மனைவியோ மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றத் துடிக்கிறார்.

இம்மூன்று தம்பதிகள், நான்கு பள்ளி மாண வர்களின் கதையாக விரியும் படத்தை, ‘பஸில்’ பொருத்தி (Puzzle play) விளையாடுவது போல, சம்பவங்களின் தொடர்ச்சிகளைத் திரைக் கதையாக அடுக்கி விளையாண்டிருக்கிறார் இயக்குநர். தற்செயல் நிகழ்வால் அடுத்தவர் வாழ்க்கையில் ஏற்படும் விளைவை நினைவூட் டும் உத்திதான். இருப்பினும், திரைக்கதையின் போதிய பொருத்தப்பாடு காரணமாக புதிர் விளையாட்டை நன்றாகவே நடத்துகிறது.

சம்பவத் தொடர்ச்சிகளைச் சரியான இடங் களில் முற்றுப்பெறச் செய்யாமல் நீட்டிக் கொண்டே செல்வதன் மூலம் சராசரி ரசிகர் களுக்கு சலிப்பு ஏற்படுத்துவது இயல்புதான். இருப்பினும் உலக திரைப்படங்களுக்கான தரமும், நம்பகத்தன்மையும் இருப்பதால் ‘கிளாஸ்’ ரசிகர்களை படம் கட்டிப்போடுவதில் வியப்பில்லை.

இளைஞர்களைக் கவரும் வகையிலான பாலியல் கிளர்ச்சி தரும் கதைகள், பச்சையும் கொச்சையுமான சொற்றொடர்கள் படத்தில் அதிக அளவில் மலிந்திருக்கின்றன. அதேநேரம் ஜனநாயகம், அது உருவாக்கி வைத்திருக்கும் ‘சிஸ்டம்’, தனிமனிதச் சுதந்திரம், குழு மனப்பான்மை, பாலினச் சமத்துவமின்மை எனக் குறைகள் மலிந்த உலகத்தைத் துளைக்கும் தருணங்கள் அவல நகைச்சுவையாகப் படம் முழுவதும் வெடித்துத் தெறித்திருக்கின்றன.

நட்சத்திரத் தேர்வும் தேர்வு செய்யப்பட்ட வர்களின் நடிப்பும் கதாபாத்திரங்களால் நிறைந்த இந்தப் படத்தின் நம்பகத் தன்மையைக் கூட்டி யிருக்கின்றன. மிக அழகாகக் கொசுவம் பிடித்து சேலை கட்டும் ஷில்பாவாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி, திருநங்கைகளின் துயரத்தை, மனப்போராட்டத்தை, பொதுவாழ்வில் எதிர் கொள்ளும் சிக்கல்களை இயல்பான உடல்மொழி, முகபாவம், வசன உச்சரிப்புத் தொனி ஆகியவை வழியே பிரமிப்பூட்டும் வகையில் வெளிப்படுத்தியுள்ளார். திரையில் வெற்றிநடைபோடும் எந்தவொரு கதாநாயக நடிகருமே இப்படி ஒரு தோற்றத்தையும், இமேஜை நொறுக்கும் காட்சி அமைப்பையும் ஏற்று நடிக்க முன் வருவார்களா என்பது சந்தேகமே. அதனாலேயே விஜய் சேதுபதிக்கு தனி மகுடம் சூட்டலாம்.

அவரது ஏழு வயது மகன் ராசுக்குட்டியாக நடித்திருக்கும் சிறுவனின் நடிப்பு, படம் வெளிப்படுத்தும் மாறுபட்ட உலக ரசனைக்கு சரியாகவே ஈடுகொடுக்கிறது.

வேம்பு கதாபாத்திரத்தில் வரும் சமந்தா, நடந்த சம்பவம் பற்றிய எந்தக் குற்றவுணர்வு மின்றி மிக இயல்பாக ‘இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்’ என்று செய்தித் தாள் கிரைம்களுக்கு சாட்சியாக நிற்கிறார்.

சடலத்துடன் சகஜமாக உரையாடும் காட்சியில் ஈர்க்கும் ஃபகத் பாசில், குடித்துவிட்டு மனைவியிடம் குமுறலை வெளிப்படுத்தும் காட்சியிலும் கைத்தட்டலை அள்ளுகிறார்.

காவல் அதிகாரியாக வரும் பகவதி பெருமாள் பாத்திரம் சில இடங்களில் பதற வைத்தாலும், பல இடங்களில் படத்தின் அதிர்வலைக்கு ஒத்துவராத ஓவர் ஆக்‌ஷன்தான்!

படமாக்கலில் பிரமிக்க வைத்திருப்பது தயாரிப்பு வடிவமைப்பு. விஜய் ஆதிநாதனின் கலை இயக்கம், பி.எஸ்.விநோத், நிரவ் ஷா ஆகிய இருவரின் ஒளிப்பதிவில் வெளிப் பட்டிருக்கும் கோணங்களும் ஒளியமைப்பும் படத்தின் அவலத் தன்மையை அப்படியே பிரதிபலித்திருக்கின்றன.

வறட்சியையே மெனக்கட்டு பதிவு செய்யும் கலை இயக்கம், ஒளிப்பதிவு ஆகிய அம்சங்களுக்கு நேர் எதிராக கொண்டாட்டமாக ஒலித்திருக்கிறது யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை. ஒரு திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என் பதை உறுதிப்படுத்தும்விதமாக சினிமாத்தனம் கலந்த யதார்த்தத் துடன் படத்தைக் கையாண்டிருக் கிறார் தியாகராஜன் குமாரராஜா. சினிமா என்பது ரசனையுடன் பார்ப் பதற்கு உகந்த சாதனம் என்ற அளவி லேயே படத்தை உருவாக்கியிருந்தாலும் அதில் ‘ஜீவாத்மா - பரமாத்மா’ பாணியில் ஆன தத்துவார்த்தப் பதிவுகளை ஆங்காங்கே தூவியிருப்பது ஓர் உறுத்தல்.

ஒருபுறம் அறிவியல், மறுபுறம் ஆண்டவர் என நகரும் கருணையற்ற உலகத்தில், பிரச்சினைகள் இருந்தபோதும், கிடைக்கும் தருணத்தில் மகிழ்ச்சியாக வாழ்வதே சிறப்பு என்பதை அழுத்தமாகவே சொல்லியிருக்கிறார் இயக்குநர். சொன்ன விஷயங்கள் புதிது இல்லை என்றாலும் சொன்ன விதத்தின் மூலம் தனது அடுத்த படத்திலும் திறமைக் கொடியை உயரத் தூக்கிப் பிடித்திருக்கிறார்.

எச்சரிக்கை: இது குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் அல்ல!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x