நம்பியார் சாமி செய்த சத்தியம்! - வீரமணி ராஜூ நெகிழ்ச்சி

நம்பியார் சாமி செய்த சத்தியம்! - வீரமணி ராஜூ நெகிழ்ச்சி
Updated on
1 min read

ஐயப்ப சுவாமியிடம் நம்பியார் குருசாமி சத்தியமே செய்திருந்தார். அதன்படியே வாழ்ந்தார் என்று பிரபல ஐயப்பப் பாடகர் வீரமணி ராஜூ தெரிவித்தார்.

நடிகர் எம்.என்.நம்பியாருக்கு இன்று மார்ச் 7ம் தேதி பிறந்தநாள். நூறாவது பிறந்தநாள். இந்த நாளில் ஐயப்பப் பாடகர் வீரமணி ராஜூ, நம்பியார் குருசாமியுடன் சபரிமலை சென்றது குறித்தும் அவரின் நற்குணங்கள் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

வீரமணி ராஜூ தெரிவித்ததாவது:

சபரிமலைக்கு இன்றைக்கு பலரும் போய்க்கொண்டிருக்கிறோம். ஆனால் சபரிமலைக்கு நம்பியார் குருசாமி அழைத்துக்கொண்டு செல்வது போல் போகவேண்டும். அதுதான் சரியான முறை.

கோபாலபுரத்தில் நம்பியார் குருசாமி வீடு உள்ளது. கார்த்திகை 1ம் தேதி அன்று அங்குதான் எல்லோரும் மாலை போட்டுக்கொள்வோம். அதேபோல், சபரிமலைக்குச் சென்றுவிட்டு, வழியில் இறங்குவதெல்லாம் கிடையாது. அதை அனுமதிக்கவும் மாட்டார். எல்லோரும் குருசாமியின் வீட்டுக்கு வந்து, மாலை கழற்றிக்கொள்ளவேண்டும்.

அப்போது எனக்கு இளம் வயதுதான். ஆனாலும் நம்பியார் குருசாமி அளவுக்கு வேகமாக யாராலும் நடக்கமுடியாது. பெரியபாதையில் இருந்து மலைக்கு ஒன்றரை நாளுக்குள் நடந்து வந்தார். எங்களையும் அழைத்து வந்தார். ஒருமுறை, என்னைக் கையைப் பிடித்துக்கொண்டு, அழைத்து வந்தது, எனக்குக் கிடைத்த பாக்கியம்.

ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னார்... மலையேற தெம்பு இருக்கிற வரைக்கும் சபரிமலைக்கு வருவேன். நடக்கமுடியலன்னு ‘டோலி’ல வரக்கூடிய சூழல் உருவாச்சுன்னா, மலைக்கு வர்றதை நிறுத்திக்குவேன்’ என்றார். ‘இது ஐயப்பன் மேல சத்தியம்’ என்றவர். அவர் இறந்து போவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை, மலைக்கு நடந்தேதான் வந்தார். அவ்வளவு ஆன்ம பலமும் தேக பலமும் கொண்டவர் நம்பியார் குருசாமி.

இவ்வாறு வீரமணி ராஜூ தெரிவித்தார்.  

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in