Last Updated : 12 Mar, 2019 04:27 PM

 

Published : 12 Mar 2019 04:27 PM
Last Updated : 12 Mar 2019 04:27 PM

உறியடி 2 கதைக்களம்; சூர்யா மூலம் கிடைத்த நம்பிக்கை: இயக்குநர் விஜயகுமார் விளக்கம்

'உறியடி 2' படத்தின் கதைக்களம் குறித்தும், சூர்யா கொடுத்த நம்பிக்கை குறித்தும் இயக்குநர் விஜயகுமார் நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.

விஜயகுமார் இயக்கி, நடித்த ‘உறியடி’ படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. விமர்சன ரீதியாகப் பலரும் கொண்டாடிய இப்படத்தின் 2-ம் பாகத்தை சூர்யா தயாரிக்கத் தொடங்கினார். விஜயகுமாரே இயக்கி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் விஸ்மயா, ஷங்கர் தாஸ், அப்பாஸ், ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ சுதாகர் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

குற்றாலம், தென்காசி பகுதிகளில் தொடங்கிய படப்பிடிப்பை, சரியாக 36 நாட்களில் முடித்து இறுதிக்கட்டப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் விஜயகுமார் கூறியிருப்பதாவது:

''இப்போதுள்ள சமூகத்திற்கு சாதிப்பிரிவினை தான் பெரும் பிரச்சினை. அதுதான் 'உறியடி', 'உறியடி 2' வருவதற்கான காரணம். எனக்கு கம்யூனிச சிந்தனையோ, புத்தகம் படிக்கிற பழக்கமோ இல்லை. எனக்கு ரொம்பப் பிடிச்சது சினிமா. அதை ஆத்மார்த்தமா கொடுக்கிறது தான் என் திறமைக்கு நான் கொடுக்குற மரியாதை.

களத்துல இறங்கி மக்களுக்காக நான் எதுவும் செய்யவில்லை. ஆனா, மக்களைச் சுலபமா அணுகுற விஷயம் சினிமா. 'Of all the arts, for us cinema is the most important'னு லெனின் சொல்லியிருக்கார்.

'கலைகளில் சினிமா தான் பெருசு'ன்னு ஒரு கலைஞன் சொல்லியிருந்தா, அது தற்பெருமைன்னு சொல்லலாம். ஆனா இதைச் சொன்னவர் மாபெரும் புரட்சியாளர். சரி, தவறைத் தாண்டி, எனக்கு எது சரியோ அதை நான் சினிமா மூலமா பண்ண நினைக்கிறேன். அதே சமயம் எனக்குள்ளே இருக்கிற படைப்பாளியைத் திருப்திப் படுத்தணும்.

2டி ராஜசேகர் சாரை ஒருநாள் சந்திச்சேன். அப்போது 'உறியடி 2' கதையைப் பற்றிச் சொல்லியிருந்தேன். அவருக்கு அது பிடித்திருந்தது. உடனடியா முழுக்கதையையும் கேட்டார். கதையின் முதல் வெர்ஷனைச் சொன்னேன். அப்புறம் சூர்யா சாரைப் பார்த்தேன். அப்போ கதையை வலுப்படுத்தி அடுத்த வெர்ஷனைச் சொன்னேன். ஒருசில கேள்விகள் கேட்டார். 'எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு, கண்டிப்பா படம் பண்ணலாம்'னு சொன்னதும், எனக்குப் பெரிய நம்பிக்கை வந்தது.

காரணம் ’உறியடி’ பட ரிலீஸ்ல ஏகப்பட்ட பிரச்சினைகள். பொருளாதார இழப்பை விட மனவலி அதிகமா இருந்தது. ’உறியடி 2’ படத்துக்கு இப்படி ஒரு தயாரிப்பு நிறுவனம் கிடைத்தது நிம்மதியாக இருக்கு. சூர்யா சாரும் ஒரு படைப்பாளிக்கு என்ன சுதந்திரம் கொடுக்கணுமோ, அதை எனக்குக் கொடுத்தார். ஷூட்டிங் முடியுற வரைக்கும் எந்தவிதமான பிரஷரும் இல்லாமல் முடித்துவிட்டோம். படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும்.

இப்படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் வேறுவிதமாக உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் இதிலும் நடித்துள்ளனர். கூடவே யூ-டியூப் மூலம் பலருக்கும் பரிச்சயமான 'மெட்ராஸ் சென்ட்ரல்' சுதாகர் நடித்துள்ளார்''.

இவ்வாறு இயக்குநர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x