

புதுமுக இயக்குநர் கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்கத்தில் உருவாகும் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அருண்விஜய்.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண்விஜய், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'தடம்' படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், திரையரங்குகளில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
'தடம்' படத்துக்கு கிடைத்திருக்கும் மகிழ்ச்சியில் இருக்கும் அருண்விஜய், மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குநர் கண்ணன் மற்றும் மிலன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கோபிநாத் நாராயணமூர்த்தி இப்படத்தை இயக்கவுள்ளார்.
மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளது குறித்து அருண்விஜய் கூறியிருப்பதாவது:
'குற்றம் 23' படத்தில் காவல்துறை அதிகாரியாக உடலை காட்டுவதோ, அல்லது அதிரடியான சண்டைக்காட்சிகளிலோ அதிகம் நடிக்கவில்லை. அது முழுக்க முழுக்க புத்திசாலித்தனம் சம்பந்தப்பட்ட ஒரு படம். அப்படத்தை வழங்கிய இயக்குனர் அறிவழகனுக்கு நன்றி.
இக்கதையை இயக்குநர் கோபிநாத் கூறியபோது, நல்ல திருப்புங்களை உடையதாக இருந்தது. மேலும், கதையாகவும் ரொம்ப பிடித்திருந்தது. 'குற்றம் 23' திரைப்படம் மருத்துவத் துறையை மையமாக கொண்ட ஒரு த்ரில்லர். ஆனால் இப்படம் நகரத்தில் தொடர்ச்சியாக நடக்கும் மர்மமான கொலைகளை பற்றியும், அவற்றின் பின்னணியில் உள்ள மர்மத்தை காவல்துறை அதிகாரி எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதையும் பற்றியதாகும்.
நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை இறுதி செய்து வருகிறார்கள். அனைத்தும் திட்டமிட்டப்படி நடந்தால், மார்ச் மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும்
இவ்வாறு அருண் விஜய் தெரிவித்துள்ளார்.
தற்போது 'அக்னி சிறகுகள்', 'பாக்ஸர்', 'சாஹோ' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் அருண்விஜய்.