

அட்லீ இயக்கிவரும் ‘தளபதி 63’ படத்தில், நயன்தாராவுக்கு அப்பாவாக கு.ஞானசம்பந்தன் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் - அட்லீ கூட்டணி இணைந்துள்ளது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
இதில், விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஜாக்கி ஷெராஃப், கதிர், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ஆனந்த் ராஜ், ரெபா மோனிகா ஜான் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் விளையாட்டுப் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய். இதற்கு ஏற்ற வகையில் தன்னுடைய உடலமைப்பையும் மாற்றியுள்ளார் விஜய். கடந்த ஜனவரி மாதம் முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி, நடைபெற்று வருகிறது.
இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. வருகிற தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தில் நயன்தாராவுக்கு அப்பாவாக கு.ஞானசம்பந்தன் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘சண்டக்கோழி 2’ படத்தில் கீர்த்தி சுரேஷின் அப்பாவாக நடித்தவர் கு.ஞானசம்பந்தன் என்பது குறிப்பிடத்தக்கது.
‘தளபதி 63’ படத்தைத் தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார் நயன்தாரா.