

பிரதமர் நரேந்திரமோடி படத்தின் ட்ரெய்லர் குறித்துக் கிண்டல் செய்துள்ள நடிகர் சித்தார்த், சில கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் 'பிஎம் நரேந்திர மோடி'. சந்தீப் சிங் தயாரிப்பில், ஒமுங் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ளது.
இதுகுறித்துத் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''பிரதமர்நரேந்திரமோடி ட்ரெய்லரைப் பார்க்கும்போது, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைத் தனி ஆளாக எதிர்த்து நின்று சுதந்திரம் வாங்கித்தந்த மோடி குறித்து ஏன் காட்டவில்லை என்ற கேள்வி எழுகிறது. மதச்சார்பு கொண்ட நக்சல்களால் உருவாக்கப்பட்ட மோசமான உத்தியாக இருக்கிறது.
#PMNarendraModi போன்ற வாழ்க்கை வரலாற்றுப் படங்களை உருவாக்கும் திரைப்பட இயக்குநர்களின் நேர்மையைப் பார்க்கும்போது என்னுடைய மனது குழம்புகிறது. இந்த ட்ரெய்லரைப் பார்க்கும்போது ஜெயலலிதாவை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு படங்கள் எப்படி வரும் என்று தெரியவில்லை.
உங்களுக்கு வரலாறு தெரியாமல் இருப்பதை மன்னித்துவிடலாம். ஆனால் வரலாற்றையே மாற்ற முயற்சிப்பதை மன்னிக்கவே முடியாது'' என்று தெரிவித்துள்ளார் சித்தார்த்.