

கன்னடத்தில் பெரும் வரவேற்பு பெற்ற 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்புவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள 'மாநாடு' படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு. இதன் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ளார்.
இப்படத்துக்கு இடையே ஹன்சிகாவின் 50-வது படமான 'மஹா'வில் கெஸ்ட் ரோலில் நடிக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் 'பொன்னியன் செல்வன்' படத்தில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, 'முஃப்தி' என்ற கன்னட படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்புவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் ஸ்ரீமுரளி நடித்த கதாபாத்திரத்தில் சிம்புவை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்கள். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
'முஃப்தி' கன்னட படத்தை இயக்கிய நரதனே தமிழ் ரீமேக்கையும் இயக்கவுள்ளார். இதில் புனித் ராஜ்குமார் நடித்த கதாபாத்திரத்துக்கு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்.
ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் இருப்பதால், யாரெல்லாம் ஒப்பந்தம் செய்யவுள்ளார்கள், எப்போது படப்பிடிப்பு என்பது வரும் நாட்களில் தெரியவரும்