

அடுத்தடுத்து இரண்டு படங்களில் விஷாலுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் தமன்னா.
சுராஜ் இயக்கத்தில் 2016-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘கத்தி சண்டை’. இந்தப் படத்தில் விஷால் ஜோடியாக தமன்னா நடித்தார். இருவரும் முதன்முதலில் இணைந்து நடித்த படம் இது. 3 வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். அதுவும் அடுத்தடுத்து இரண்டு படங்களில்.
விஷால் நடிப்பில் தற்போது ரிலீஸுக்குத் தயாராகிவரும் படம் ‘அயோக்யா’. அறிமுக இயக்குநர் பி.கெளதம் ராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், விஷால் ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், சச்சு, வம்சி கிருஷ்ணா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மே மாதம் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.
‘அயோக்யா’ படத்தைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கிறார் விஷால். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். கடந்த ஜனவரி மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.
இந்தப் படம் மட்டுமின்றி, இன்னொரு படத்திலும் விஷாலுடன் நடிக்கிறார் தமன்னா. இந்தப் படத்தில், வில்லியாக நடிக்கிறார் தமன்னா எனத் தகவல் வெளியாகியுள்ளது. சுந்தர்.சி படத்துக்குப் பிறகு இந்தப் படத்தில் நடிக்கிறார் விஷால். இயக்குநர் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் தெரியவரும். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் விஷாலே இந்தப் படத்தைத் தயாரிக்கலாம் எனத் தெரிகிறது.