

நயன்தாராவிடம் வருத்தத்தை பதிவு செய்வேன் என்றும், திமுக-விலிருந்தும் விலகுகிறேன் என ராதாரவி தெரிவித்தார்.
'கொலையுதிர் காலம்' பத்திரிகையாளர் சந்திப்பில், நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய பேச்சு மிகவும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ் திரையுலகினர் பலரும் தங்களுடைய கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
ராதாரவியின் பேச்சு பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு திமுக நாளிதழான 'முரசொலி'யில் இடம்பெற்றுள்ளது. மேலும், திமுக தலைவர் ஸ்டாலினும் ராதாரவியின் பேச்சுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
ராதாரவியைச் சுற்றியுள்ள இந்தச் சர்ச்சைத் தொடர்பாக அவரிடம் கேட்ட போது கூறியதாவது:
நாங்கள் எல்லாம் ஒரே சினிமா ஜாதிக்காரர்கள். மனதில் பட்டதைச் சொல்றவன் தான். ஆனால், இந்த விஷயத்தில் யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று நான் பேசவில்லை. ஆனால், இதற்காக நயன்தாரா மிகவும் வருத்தப்பட்டார் என்று சொன்னார்கள். ஆகையால் நானும் வருத்தப்படுகிறேன். நயன்தாரா நேரில் பார்க்கும் போது, வருத்தத்தை பதிவு செய்வேன். உங்களைப் பற்றி பேசவில்லை என்பதை அவரிடம் எடுத்துரைத்து, நிரூபிப்பேன்.
நான் பேசியதில் தவறில்லை. யாரையும் புண்படுத்திப் பேசமாட்டேன். மனதில் விஷமத்தன்மையுடன் பேசியதில்லை. எனக்கு நயன்தாராவுக்கும் சம்பந்தமே கிடையாது. இருப்பினும் இருவருமே ஒரே ஜாதி. சினிமா ஜாதி. இந்த விஷயத்தில் திமுக இயக்கத்துக்கு குந்தகம் விளைவித்தது மாதிரி இருந்தால், நானே விலகிக் கொள்கிறேன். என்னால் கட்சிக்கு அவப்பெயர் வேண்டாம். யார் மீதும் எனக்கு கோபமோ, வருத்தமோ இல்லை.
இவ்வாறு ராதாரவி தெரிவித்தார்.