

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 'ஸ்மைல் சேட்டை' கார்த்திக் இயக்கி வரும் படத்துக்கு 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' என்று பெயரிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்கள் தயாரித்து வருகிறார் சிவகார்த்திகேயன். முதல் படமாக அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான 'கனா' படத்தை தயாரித்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக முன்னணியில் இருக்கும் ரியோ நாயகனாக நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதனை 'ஸ்மைல் சேட்டை' யூ-டியூப் சேனல் புகழ் கார்த்திக் இயக்கி வருகிறார்.
நாயகியாக ஷெரில், நாஞ்சில் சம்பத், ராதாரவி, ஆர்.ஜே.விக்னேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்துக்கு 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒளிப்பதிவாளராக யு.கே.செந்தில்குமார், எடிட்டராக ஒலிஃபர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
இப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது அடுத்த தயாரிப்புக்காக பல்வேறு கதைகளையும் கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.