அஜித்துக்கு நன்றி தெரிவித்த அண்ணா பல்கலைக் கழகம்

அஜித்துக்கு நன்றி தெரிவித்த அண்ணா பல்கலைக் கழகம்
Updated on
1 min read

ஆளில்லா விமான வடிவமைப்பு ஆலோசகராகப் பணியாற்றியதற்காக, அண்ணா பல்கலைக் கழகம் அஜித்துக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் அனுப்பியுள்ளது.

சென்னை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உள்ள வான்வெளி ஆராய்ச்சி மையமான தக்‌ஷா குழுவின் ஆலோசகராகக் கடந்த வருடம் நியமிக்கப்பட்டார் அஜித். அதன்மூலம் ஆளில்லா விமானங்களை உருவாக்க மாணவர்களுக்கு உதவினார். அஜித்தின் வழிகாட்டுதலில் ‘தக்‌ஷா’ அணியின் ட்ரோன் (ஆளில்லா விமானம்) நீண்ட நேரம் வெற்றிகரமாகப் பறந்து சாதனை படைத்தது.

இதே குழு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்ட் பகுதியில் நடைபெற்ற ‘மெடிக்கல் எக்ஸ்பிரஸ் யுஏவி சேலஞ்ச் - 2018’ போட்டியில் கலந்துகொண்டது. மருத்துவ சேவையில் ஆளில்லா விமானங்களின் பணி என்ற கருப்பொருளில் இந்தப் போட்டி நடைபெற்றது.

இதில், நீண்ட நேரம் பறத்தல், தேவைப்படும்போது உடனடியாகத் தரை இறங்குதல், விமானக் குழுவின் நேர்காணல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வெற்றி தீர்மானிக்கப்பட்டது. இந்தப் போட்டியில், ஆஸ்திரேலியாவின் மோனாஷ் யூஏஎஸ் ஆளில்லா விமானத்துக்கும், இந்தியாவின் தக்‌ஷா ஆளில்லா விமானத்துக்கும் இடையே கடும் போட்டி இருந்தது. நூலிழையில் முதலிடத்தைத் தவறவிட்ட தக்‌ஷா விமானம், சர்வதேச அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது.

இந்நிலையில், இந்தக் குழுவின் ஆலோசகராகப் பணியாற்றியதற்கு நன்றி தெரிவித்து, அஜித்துக்குக் கடிதம் அனுப்பியுள்ளது அண்ணா பல்கலைக் கழகத்தின் வான்வெளி ஆராய்ச்சி மையம்.

கடந்த மாதம் (ஜனவரி) 23-ம் தேதி சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஆளில்லாமல் இயங்கக் கூடிய டாக்ஸி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. இதுவும் அஜித்தின் ஆலோசனையின் பேரில் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in