

ப்ரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் படத்துக்கு இசையமைப்பாளராக ஹிப்ஹாப் தமிழா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'அடங்கமறு' படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் ப்ரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறது.
இப்படத்துக்காக ஜெயம் ரவி மிகவும் உடல் எடையைக் குறைத்து நடிக்கவுள்ளார். இதற்காக வெளிநிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் உள்ளார். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
தற்போது இப்படத்தின் இசையமைப்பாளராக ஹிப் ஹாப் தமிழா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முன்பாக, ஜெயம் ரவி நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற 'தனி ஒருவன்' படத்துக்கு இசையமைப்பாளராக ஹிப் ஹாப் தமிழா பணிபுரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து மீண்டும் ஜெயம் ரவியுடன் இணைந்து பணிபுரியவுள்ளார் ஹிப் ஹாப் தமிழா.
இதில் ஜெயம் ரவிக்கு நாயகியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். மேலும், கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதனை முடித்துவிட்டு மீண்டும் தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் ஜெயம் ரவி.