

‘தளபதி 63’ படத்தில், விஜய்யுடன் நடிப்பதோடு மட்டுமின்றி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடுகிறார் ‘சூப்பர் சிங்கர்’ பூவையார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ ‘சூப்பர் சிங்கர்’ ஜூனியர் - சீஸன் 6. பிரபல பின்னணிப் பாடகர்களான ஷங்கர் மகாதேவன், சித்ரா, எஸ்.பி.பி.சரண், கல்பனா ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்து, சிறந்த பாடகர்களைத் தேர்ந்தெடுத்து வருகின்றனர்.
சித்ரா மற்றும் எஸ்.பி.பி.சரண் ஒரு அணியின் தலைவர்களாகவும், ஷங்கர் மகாதேவன் மற்றும் கல்பனா இருவரும் மற்றொரு அணியின் தலைவர்களாகவும் இருந்து வழிநடத்தி வரும் இந்த நிகழ்ச்சியில், தற்போது டாப் 8 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த டாப் 8 போட்டியாளர்களில், சென்னையைச் சேர்ந்த பூவையாரும் ஒருவர். பள்ளியில் படித்துவரும் பூவையார், கானா பாடல்கள் பாடுவதில் வல்லவர். ‘சூப்பர் சிங்கர்’ செட்டில் இவரைச் செல்லமாக ‘கப்பீஸ்’ என்று அழைக்கின்றனர்.
இந்தப் பூவையார், அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘தளபதி 63’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விஜய்யுடன் சேர்ந்து நடிக்க இருக்கும் பூவையார், இந்தப் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாடலையும் பாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் ‘தளபதி 63’ படத்தில், விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், விவேக், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு, தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. வருகிற தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.