

தெலுங்கில் நடிக்கவுள்ள புதிய படத்துக்காக மல்யுத்தப் பயிற்சி பெற்று வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
'சலீம்' படத்தை இயக்கிய நிர்மல் குமார், புதிதாக தெலுங்குப் படமொன்றை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். முன்னதாக அவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ள 'சதுரங்க வேட்டை 2' வெளியீட்டுச் சிக்கலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நிர்மல் குமார் இயக்கவுள்ள நேரடி தெலுங்குப் படத்தில் மல்யுத்த வீராங்கனையாக நடிக்கவுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதற்காக பிரத்யேகப் பயிற்சிகள் எடுத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
மேலும், கிரிக்கெட் கற்றுக்கொண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'கனா' படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது கிரிக்கெட் பயிற்சியைத் தொடர்ந்து மல்யுத்தப் பயிற்சியை ஐஸ்வர்யா ராஜேஷ் பெற உள்ளது நினைவுகூரத்தக்கது.
நிர்மல் குமார் படத்துக்கு முன்னதாக விஜய் தேவரகொண்டாவுக்கு நாயகியாக புதிய படமொன்றில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். தமிழில் கோபி நயினார் இயக்கி வரும் 'கருப்பர் நகரம்', சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'மகளிர் அணி', கெளதம் மேனன் இயக்கி வரும் 'துருவ நட்சத்திரம்' மற்றும் மணிரத்னம் தயாரிக்கவுள்ள புதிய படம் ஆகியவற்றில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.