மணிரத்னம் தயாரிப்பில் விக்ரம் பிரபு
மணிரத்னம் தயாரிக்கும் படத்தில், ஜீ.வி.பிரகாஷுடன் இணைந்து விக்ரம் பிரபு நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்னத்திடம் அசோஸியேட்டாகப் பணியாற்றியவர் தனசேகரன். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் திரைக்கதையை, தனசேகரனுடன் இணைந்து மணிரத்னம் எழுதியுள்ளார்.
மேலும், மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார் மணிரத்னம். ‘96’ படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா, இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில், ஜீ.வி.பிரகாஷின் சகோதரியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். மணிரத்னம் தயாரித்து, இயக்கிய ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் அருண் விஜய் ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், மறுபடியும் மணிரத்னம் தயாரிப்பில் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் தற்போது விக்ரம் பிரபுவும் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கலாம் என்கிறார்கள். இந்தப் படத்தைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
விக்ரம் பிரபு நடிப்பில் ‘அசுர குரு’, ‘வால்டர்’ ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன.
