

ஆணாதிக்க சிந்தனை கொண்டவர்கள் '90 எம்.எல்' பார்க்க வேண்டாம் என்று ஓவியா தெரிவித்துள்ளார்.
அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள படம் '90 எம்.எல்'. பிப்ரவரி 1-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்துக்கு சிம்பு இசையமைத்துள்ளார். படத்துக்கு தணிக்கையில் 'ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது.
'90 எம்.எல்' படத்தின் ட்ரெய்லர், SNEAK PEEK உள்ளிட்டவற்றில் இருக்கும் ஆபாசக் காட்சிகள் மற்றும் வசனத்துக்கு இணையத்தில் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இப்படத்தை ஆணாதிக்க சிந்தனை உடையவர்கள் பார்க்க வேண்டாம் என்று ஓவியா கூறியுள்ளார்.
'90 எம்.எல்' படம் குறித்து ஓவியா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
''இப்படத்தை 18 வயதைத் தாண்டியவர்கள் மட்டுமே காண முடியும். இது ஆண்களுக்கு எதிரான படம் அல்ல. 5 பெண்கள் சந்தோஷமாக இருக்கும் வாழ்க்கையைப் பற்றிய கதை. இதனைக் குடும்பத்துடன் காண இயலாது. கதைக்களமே வித்தியாசமானது.
ஆணாதிக்க சிந்தனை கொண்டவர்கள் இப்படத்தைப் பார்க்க வர வேண்டாம். அவர்களுக்கு இப்படத்தின் கதை பிடிக்காது. பெண்கள் புகை பிடிக்கிற, மது அருந்துகிற காட்சிகளை அவர்கள் ரசிக்க மாட்டார்கள். குறை சொல்வார்கள். இப்படத்தின் ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு பலர் திட்டித் தீர்த்து வருகிறார்கள். அதுவே ஆணாதிக்க சிந்தனை''.
இவ்வாறு ஓவியா தெரிவித்துள்ளார்