கடன் கேட்க தவித்த பாலுமகேந்திரா; கேட்காமலேயே உணர்ந்து உதவிய கமல்!

கடன் கேட்க தவித்த பாலுமகேந்திரா; கேட்காமலேயே உணர்ந்து உதவிய கமல்!
Updated on
2 min read

கடன் கேட்பதற்காக கமலிடம் சென்ற பாலுமகேந்திரா, கேட்பதற்கு தவித்துப் போய் பேசாமல் இருந்தார். ஆனால் அதை உணர்ந்த கமல், தாமாகவே உதவி செய்தார்.

இயக்குநர் பாலுமகேந்திராவின் நட்பு வட்டம் மிகச்சிறியது. எவரிடமும் எதற்காகவும் எந்த நிலையிலும் எதுவும் கேட்கமாட்டார். அவரின் இயல்பு அப்படி.

திரைத்துறைக்கு வந்த புதிதிலேயே மலையாளப் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர், இயக்கும் எண்ணத்திலேயே இருந்தார். அந்த சமயத்தில் கமல்ஹாசனை சந்தித்துப் பேசும் தருணம், இருவருக்குள்ளும் ஓர் புரிதல் ஏற்பட்டது. பாலுமகேந்திரா இயக்கியது முதலில் கன்னடத்தில்தான். ‘கோகிலா’ என்ற அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் படத்தின் நாயகன் கமல்.

ஆடுபுலி ஆட்டம் முதலான படங்களுக்கு கதை வசனம் எழுதிக்கொண்டிருக்கும் போதே இயக்குநர் மகேந்திரனுடன் நல்ல நட்பு கமலுக்கு உண்டு. பிறகு ஆனந்தி பிலிம்ஸ் வேணு செட்டியார் தயாரிக்க, மகேந்திரன் முதல் படத்தை இயக்கினார். அந்தப் படத்துக்கு ரஜினிதான் நாயகன். ‘லொகேஷன், கதை எல்லாமே நல்லாருக்கு. அதுக்குத் தகுந்த மாதிரி, ஒரு ஒளிப்பதிவாளர் கிடைச்சா நல்லாருக்கும்’ என்று மகேந்திரன் கமலிடம் சொல்ல, பாலுமகேந்திராவை அறிமுகப்படுத்திவைத்தார் கமல். அந்தப் படம் ‘முள்ளும் மலரும்’, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது என்பதை இன்றைய தலைமுறை கூட தெரிந்துவைத்திருக்கிறது.

கோகிலாவுக்குப் பிறகு தமிழில் ‘அழியாத கோலங்கள்’ படத்தை இயக்கினார் பாலுமகேந்திரா. இந்தப் படத்தில் கமல், கெளரவ வேடத்தில் நடித்துக்கொடுத்தார். அதையடுத்து, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், கமல், ஸ்ரீதேவி, சில்க்ஸ்மிதா நடித்த ‘மூன்றாம் பிறை’ கமலுக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.

இப்படி கமலுக்கும் பாலுமகேந்திராவுக்குமான நட்பு, தொடர்ந்து பலப்பட்டுக்கொண்டே இருந்தது.

’மறுபடியும்’ படத்துக்குப் பிறகு, பாலுமகேந்திராவுக்கு மிகப்பெரிய பணச்சிக்கல். என்ன செய்வது, எவரிடம் கேட்பது என்று தெரியாமல் ரொம்பவே துடித்துப் போனார். அப்படி யாரிடமும் பணமோ உதவியோ கேட்டதில்லை பாலுமகேந்திரா. யோசிக்க, ‘கமல்தான் நமக்கு நல்ல நண்பன். அவரிடம் இதுவரை எந்த உதவியும் கேட்டதே இல்லை. அவரிடம் கேட்போம்’ என்று கமலின் அலுவலகத்துக்கு வந்தார் பாலுமகேந்திரா.

அவரைப் பார்த்ததும் கமல் குஷியாகிவிட்டார். அன்றைய தேதிக்கு வந்திருக்கிற தமிழ், இந்தி, மலையாளப் படம் தொடங்கி, உலகப் படங்கள் வரை கமல் விலாவரியாகச் சொல்லிக்கொண்டே இருக்க, பாலுமகேந்திராவும் பதிலுக்கு அவரும் பல படங்களைச் சொல்லியபடி இருந்தார். ஆனால் பணம் மட்டும் கேட்கவே இல்லை.

ஒன்றரை மணி நேரம் பேச்சுப் போய்க்கொண்டே இருக்க, சட்டென்று கடிகாரத்தைப் பார்த்த கமல், ‘அடடா... நேரம் போனதே தெரியல. ஷூட்டிங்குக்கு டைம் ஆயிருச்சு. இதோ ரெண்டே நிமிஷம்... வந்துடுறேன்’ என்று சொல்லிவிட்டு, மேலே சென்றார்.

பண உதவி, கடனுதவி கேட்க வந்த பாலு மகேந்திரா, கமலிடம் கேட்கத் தயங்கிக் கொண்டே இருந்தார். ‘சரி, பார்த்துக்கொள்ளலாம்’ என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்.

அடுத்த இரண்டாவது நிமிடம்... மாடியில் இறங்கி வந்த கமல், பாலுமகேந்திராவிடம் மிகப்பெரிய கவர் ஒன்றை நீட்டினார். ‘இந்தாங்க’ என்றார். அந்தக் கவரை வாங்கிப் பிரித்த பாலுமகேந்திராவுக்கு ஆச்சரியம் ப்ளஸ் அதிர்ச்சி. பணம்... முழுவதும் பணம்!

நெகிழ்ந்து போய் பேசவே முடியவில்லை பாலுமகேந்திராவால். அதில் இன்னொரு ஆச்சரியம்... பாலு மகேந்திரா கேட்க நினைத்த தொகையை விட மூன்று மடங்கு தொகை அந்தக் கவரில் இருந்தது.

‘உங்களை எனக்குத் தெரியும் பாலு சார். கடன் கேக்க கூச்சப்படுவீங்க. அதனால, இது கடன் இல்ல. இனாமும் இல்ல. அப்படி இனாம் வாங்கறது உங்களுக்கு சுத்தமா புடிக்காது. அதுவும் தெரியும் எனக்கு. இது அட்வான்ஸ். நம்ம ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிற படத்தை, நீங்கதான் டைரக்ட் பண்றீங்க. உற்சாகமா வேலையை ஆரம்பிங்க பாலு சார்’ என்று கைகுலுக்கினார் கமல், கட்டியணைத்துக் கொண்டார் பாலுமகேந்திரா. அந்தப் படம்தான் சதிலீலாவதி. மிகப்பெரிய ஹிட் படத்தைக் கொடுத்து, தன் அன்பை, நன்றியை வெளிப்படுத்தினார் பாலுமகேந்திரா.

இன்றைக்கும் ‘சதிலீலாவதி’ படத்தைப் பார்த்து, வயிறு வலிக்க சிரித்துக்கொண்டே இருக்கிறோம். அந்தச் சிரிப்புக்குப் பின்னே உள்ள பாலு மகேந்திராவின் வலியும் அவருக்கும் கமலுக்குமான அன்பும், அதைவிட அடர்த்தியானது.

13.2.19 இன்று பாலுமகேந்திரா நினைவு தினம்.  

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in