

காதலர் தின வெளியீட்டிலிருந்து பின்வாங்கியுள்ளது பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள 'வர்மா'.
2017-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இப்படம் ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. பாலா இயக்கியுள்ள இந்தப் படத்தில், விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகவுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன. முதலில் 2018-ம் ஆண்டு டிசம்பர் வெளியீடாக இருந்தது. ஆனால், பணிகள் முடிவடையாத காரணத்தால் பிப்ரவரியில் வெளியாகும் என அறிவித்தது படக்குழு.
'வர்மா' ட்ரெய்லர் வெளியீட்டின்போது காதலர் தின வெளியீடாக கொண்டுவரத் திட்டமிட்டனர். ஆனால், தற்போது அதிலிருந்து பின்வாங்கியுள்ளனர். இதுதொடர்பாக விசாரித்தபோது, "இன்னும் ஒரு சில பணிகள் பாக்கியுள்ளன. மார்ச் மாதத்தில் திரைக்கு வரும்" என்று படக்குழுவினர் சார்பில் தெரிவித்தனர்.
இப்படத்தில் மேகா என்ற மாடல் துருவ் விக்ரம் ஜோடியாக நடித்துள்ளார். பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ இந்தப் படத்தை வழங்க, இ4 என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்துக்கு ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களின் இயக்குநர் ராஜு முருகன் வசனம் எழுதியுள்ளார்.