

'அண்டாவ காணோம்' இயக்குநர் வேல்மதி இயக்கவுள்ள அடுத்த படத்தில் நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரேயா ரெட்டி, வினோத் முன்னா, நவீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அண்டாவ காணோம்'. ஜே.சதீஷ்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை வேல்மதி இயக்கியுள்ளார்.
நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருக்கும் இப்படம், பல முறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு (2019) வெளியாகும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், 'அண்டாவ காணோம்' இயக்குநர் அடுத்ததாகக் கதை ஒன்றைத் தயார் செய்து நயன்தாராவிடம் கூறியுள்ளார். அவருக்கு கதை மிகவும் பிடித்துவிடவே, ஓகே சொல்லியுள்ளார்.
இப்படத்தை, கன்னடத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் புனித் ராஜ்குமாரின் மேலாளர் குமார் தயாரிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நயன்தாராவுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது.
நயன்தாரா நடிப்பில் 'தளபதி 63', 'சைரா நரசிம்மரெட்டி', 'லவ் ஆக்ஷன் ட்ராமா', 'Mr. லோக்கல்', 'ஐரா', 'கொலையுதிர் காலம்' ஆகிய படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகி வருகின்றன.