செளந்தர்யா - விசாகன் திருமணம்: முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு

செளந்தர்யா - விசாகன் திருமணம்: முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு
Updated on
1 min read

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் இன்று (பிப்ரவரி 11) திருமணம் நடைபெற்றது.

கிராபிக் டிசைனர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பல திறமைகள் கொண்டவர் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா. இவருக்கும், தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும் கடந்த 2010-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக செளந்தர்யாவும் அஸ்வினும் பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில், நடிகரும் தொழிலதிபருமான விசாகனுக்கும் செளந்தர்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. விசாகனும் ஏற்கெனவே திருமணமாகி, விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சௌந்தர்யா - விசாகன் திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர். திருநாவுக்கரசர், கமல்ஹாசன், இளையராஜா என நெருங்கிய நண்பர்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் வைத்த ரஜினி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கும் அழைப்பிதழ் வைத்தார்.

கடந்த 8-ம் தேதி, கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் செளந்தர்யா - விசாகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் செளந்தர்யா - விசாகன் திருமணம் இன்று நடைபெற்றது.

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, கடம்பூர் ராஜு, முன்னாள் மேயர் சைதை துரைசாமி, திருநாவுக்கரசர், மு.க.அழகிரி, வைகோ, கமல்ஹாசன், கஸ்தூரி ராஜா, எஸ்.தாணு, தமிழருவி மணியன், வைரமுத்து, மதன் கார்க்கி, எஸ்.பி.முத்துராமன், எஸ்.ஏ.சந்திரசேகர், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

வைகோ, மணமக்கள் இருவருக்கும் திருக்குறள் நூலைப் பரிசாக வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in