

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ள படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
'தேவ்' படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. சுமார் 80% படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், மார்ச் முதல் வாரத்தில் ஒட்டுமொத்த படத்தையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் படத்தைத் தொடர்ந்து, பாக்கியராஜ் கண்ணன், ஜீத்து ஜோசப் உள்ளிட்ட இயக்குநர்களின் கதைகளில் நடிக்க முடிவு செய்திருந்தார் கார்த்தி. இதில் எது முதலில் தொடங்கும் என்ற கேள்வி எழுந்து வந்தது. இதில் முதலாவதாக பாக்கியராஜ் கண்ணன் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் கார்த்தி
ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் நாயகியாக ராஷ்மிகா மண்டன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் நடித்து தெலுங்கு, தமிழில் வெளியான, விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த 'கீதா கோவிந்தம்' படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழில் இப்படத்தின் மூலம் கார்த்திக்கு நாயகியாக அறிமுகமாகவுள்ளார்.
இசையமைப்பாளராக விவேக் - மெர்வின், ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், கலை இயக்குநராக ஜெய், சண்டை பயிற்சியாளராக திலீப் சுப்பராயன், எடிட்டராக ரூபன், ஆடை வடிவமைப்பாளராக உத்ரா மேனன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். படப்பிடிப்புக்காக முதற்கட்ட பணிகளில் மும்முரமாக பணிபுரிந்து வருகிறது படக்குழு. இதற்கு புரொடக்ஷன் டிசைனராக ராஜீவன் பணியாற்றி வருகிறார். இதன் படப்பிடிப்பு மார்ச் 2-ம் வாரத்திலிருந்து தொடங்க ஆயுத்தமாகி வருகிறார்கள்.
எமோஷன், ஆக்ஷன் கலந்த காமெடி கதையாக இப்படம் உருவாகவுள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமான பல அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் பல இடங்களிலும், ஹைதராபாத்தில் அரங்குகள் அமைத்தும் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.