

காமெடி நடிகை மதுமிதாவுக்கு நாளை மறுநாள் (பிப்ரவரி 15) திருமணம் நடைபெற இருக்கிறது.
உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக அறிமுகமான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில், சந்தானம் ஜோடியாக நடித்தவர் மதுமிதா. இந்தப் படத்தில் ‘ஜாங்கிரி’ எனச் செல்லமாக சந்தானம் இவரை அழைக்க, அந்தப் படம் மிகப்பெரிய அளவில் கவனத்தைப் பெற்றதால் ‘ஜாங்கிரி’ மதுமிதா என்றே அழைக்கப்படுகிறார்.
‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தைத் தொடர்ந்து ‘ராஜா ராணி’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘ஜில்லா’, ‘தெனாலிராமன்’, ‘புலி’, ‘காஷ்மோரா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தில், தம்பி ராமையா ஜோடியாக நடித்தார்.
இந்நிலையில், நாளை மறுநாள் மதுமிதாவுக்குத் திருமணம் நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியானது. மணமகன் பெயர் மோசஸ் ஜோயல் என்றும், சினிமாவில் உதவி இயக்குநராக இருக்கிறார் என்றும் கூறப்பட்டது.
இதுகுறித்து மதுமிதாவிடம் பேசியபோது, “என் திருமணச் செய்தி உண்மைதான். என்னுடைய தாய்மாமாவின் பையன் அவர். இருவீட்டாரும் பேசி நிச்சயித்த திருமணம் இது. அவர் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். அவர்தான் முதலில் சினிமாவுக்கு வந்தார். அவரைத் தொடர்ந்து நானும் சினிமாவுக்கு வந்தேன்” என்றார்.
கோயம்பேட்டில் உள்ள ஜே.பி. திருமண மண்டபத்தில், காலை 7.30 மணிக்குத் திருமணம் நடைபெறுகிறது.