

ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் 'சாஹோ' படப்பிடிப்பு தளத்துக்குச் சென்று பிரபாஸிடம் நீண்ட நேரம் உரைடியாடி விட்டு வந்துள்ளார் அஜித்
'விஸ்வாசம்' படத்தைத் தொடர்ந்து, 'பிங்க்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கத் தொடங்கியுள்ளார் அஜித். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார்.
வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர் உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்து வருகிறார்கள். இப்படம் மே 1-ம் தேதி வெளியீடு என்று அறிவித்துள்ளது படக்குழு. இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.
இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதற்கு அருகிலேயே பிரபாஸ் நடித்து வரும் 'சாஹோ' படப்பிடிப்பு மற்றும் ப்ரியதர்ஷன் இயக்கிவரும் 'மாராக்கர்: அரபிக்கடலின்டே சிம்மம்' படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது.
தன் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துவிட்டு, 'சாஹோ' படப்பிடிப்பு தளத்துக்குச் சென்றுள்ளார் அஜித். அங்கு பிரபாஸுடன் நீண்ட நேரம் உரையாடிவிட்டு திரும்பியுள்ளார் அஜித். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எதையும் படக்குழு இன்னும் வெளியிடவில்லை. 'பில்லா' ரீமேக்கில் தமிழில் அஜித்தும், தெலுங்கில் பிரபாஸும் நடித்தது குறிப்பிடத்தக்கதும்.
மேலும், 'மாராக்கர்: அரபிக்கடலின்டே சிம்மம்' படப்பிடிப்பு தளத்துக்கும் சென்றுள்ளார் அஜித். அங்கு இயக்குநர் ப்ரியதர்ஷனிடம் நீண்ட நேரடி பேசியுள்ளார். எப்போதுமே அஜித் வெளியே சென்றாலே ரசிகர்கள் சூழ்ந்து கொள்வார்கள். ஆனால், படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் இருக்க மாட்டார்கள் என்பதால், பக்கத்தில் நடைபெறும் படப்பிடிப்பு தளங்களுக்குச் சென்று நட்பு பாராட்டி மகிழ்ந்திருக்கிறார் அஜித்.