

படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, கஜா புயலால் பாதித்த 10 பள்ளிகளை தத்தெடுக்க 'எல்.கே.ஜி' படக்குழு முடிவு செய்துள்ளது.
ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக அறிமுகமாகியுள்ள படம் 'எல்.கே.ஜி'. பிப்.22-ம் தேதி வெளியான இப்படத்தில் ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், சந்தான பாரதி உள்ளிட்ட பலர் ஆர்.ஜே.பாலாஜியுடன் நடித்துள்ளனர்.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் வெளியான 3 நாட்களிலேயே அனைத்து தரப்புக்கும் லாபத்தை ஈட்டியுள்ளது. இந்த சந்தோஷத்துக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு.
இதில் 'எல்.கே.ஜி' படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் ஆர்.ஜே.பாலாஜி பேசியதாவது:
இப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சார் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். இதுவரை பட்ஜெட் விஷயத்தில், செலவு செய்த விஷயத்தில் அவர் தலையிட்டதே இல்லை.
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவும் மனம் கொண்டவர் ஜேகே ரித்தீஷ். சிவாஜி சார் குடும்பத்தில் இருந்து இந்த படத்தை பார்த்து விட்டு, சிவாஜி ஃபிலிம்ஸிக்கு படம் பண்ண சொன்னார் ராம்குமார் சார். அவர் கேட்டது என் பாக்கியம்.
நாஞ்சில் சம்பத் சார் மீது இருந்த கறை இப்படத்தின் மூலம் துடைத்தெறியப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி. அடுத்தடுத்து 4 படங்களில் நடித்து வருகிறார். 45 நாட்கள் திட்டமிட்ட படத்தை 37 நாட்களில் முடித்தோம்.
முதல் பட நாயகனுக்கு 310 திரையரங்குகள் கிடைத்திருப்பதும், அதில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதும் மகிழ்ச்சி. அதை சாத்தியப்படுத்திய சக்திவேலன் சாருக்கும் நன்றி. படத்தின் ரிலீஸுக்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன.
ஆனாலும் ஐசரி கணேஷ் சார் விரும்பினால் அடுத்த படத்தை அவருக்கே செய்ய விரும்புகிறேன். இப்படத்தின் வெற்றியின் மூலம் வரும் பணத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 10 பள்ளிகளை தத்தெடுத்து மேம்படுத்த இருக்கிறோம்
இவ்வாறு ஆர்.ஜே.பாலாஜி பேசினார்.